விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் மீது மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.
பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் நேற்று (29.04.2024) தீர்ப்பு வழங்கியது. இதற்காக நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2வது மற்றும் 3ஆவது நபர்களான முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான பேராசிரியை நிர்மலா தேவியைக் குற்றவாளி என அறிவித்து அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.
இன்று நிர்மலாதேவிக்கான தண்டனை அறிவிக்கப்பட இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நிர்மலா தேவி தரப்பு நீதிமன்றத்தில் கோரிய நிலையில் தற்போது அவருக்கான தண்டனை விவரம் வெளியாகியுள்ளது. தீர்ப்பின்படி நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2,42,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறைக்கு நிர்மலா தேவி அழைத்து செல்லப்பட இருக்கிறார்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் பேசுகையில், ''இந்திய தண்டனைச் சட்டம் 370 உட்பிரிவு ஒன்றின் கீழ் 7 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 370 பிரிவு மூன்றின் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 5 (1a) பிரிவில் 5 வருடம் கடுங்காவல் சிறையும், 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே சட்டத்தில் பிரிவு ஒன்பதின் கீழ் 10 வருட காலம் கடுங்காவல் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப மீறல் சட்டத்தின் படி மூன்று வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது.
அவர் ஏற்கெனவே இந்த வழக்கில் சிறையில் இருந்த காலத்தை கழித்துக் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அரசு தரப்பின் புலன் விசாரணைப்படி குற்றங்களை செய்ய தூண்டியவர்கள்; இந்த அம்மாவுக்கு ஏற்கெனவே இதுபோன்ற குற்றங்களில் உள்ள பரிட்சியத்தை அறிந்து பயன்படுத்தியவர்கள் மூன்றாவது அல்லது இரண்டாவது எதிரியாக தான் எங்களுக்கு தெரிய வந்தது. சாட்சிகளும் அப்படித்தான் சொல்லி இருந்தார்கள். இரண்டாவது, மூன்றாவது எதிரிகளுக்காக இங்கு நாங்கள் அரசு தரப்பில் ஆவணங்கள், சாட்சியங்கள் என எல்லாத்தையும் சமர்ப்பித்தோம். சில குறிப்பிட்ட சாட்சிகள் குறிப்பாக பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாட்சிகள் பிறழ் சாட்சியான காரணத்தால் இரண்டாவது மூன்றாவது எதிரிகள் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். மற்றபடி புலன் விசாரணையில் மற்றவர்களை குற்றம் சாட்டும் அளவிற்கு எந்த வித சாட்சிகளும் இல்லாமல் இருந்தது.
இந்த வழக்கில் இரண்டு மூன்று எதிரிகள் விடுபட்டிருந்தாலும் அதற்கு ஒரு வாய்ப்பாக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளது. அதற்கான வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் இந்த உத்தரவில் இதுபோன்ற வழக்குகளில் இரக்கம் காட்டக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்கள். சமுதாயத்திற்கு எதிரான இது போன்ற வழக்குகளில் நீதிமன்றம் இரக்கம் காட்டுவது சரியாக இருக்காது. 370 பிரிவு மூன்றின் கீழ் ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம். ஆனால் பத்து வருடம் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், 'யாருக்காக இந்தக் குற்றத்தில் நிர்மலா தேவி ஈடுபட்டார். ஹையர் ஆபீஷியல் என கவர்னர் மாளிகை வரை பேசப்பட்டதே' என்ற கேள்விக்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ''நக்கீரன் இதழில் இது சம்பந்தமாக பிரசுரமாகி இருந்தது. அந்த நக்கீரன் வார இதழை ஆவணப்படுத்தினோம். ஒளிவு மறைவு இல்லாமல் இந்த வழக்கு சிபிசிஐடி நடத்த வேண்டும் என்பதால்தான் இந்த வழக்கில் எல்லா விட்னசும் என்ன சொன்னாங்களோ அவருக்கு பேவராக இருந்த விட்னெஸ்களை கூட போட்டிருக்கிறோம். ஒளிவு மறைவு இல்லாமல் செய்துள்ளோம். நக்கீரன் வார இதழைக் கூட நீதிமன்றத்தில் அரசு தரப்பு ஆவணமாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது'' எனக் கூறினார்.