தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடந்த சனிக்கிழமை (06.03.2021) அன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகித்துப் போட்டியிடும். வரும் 8ஆம் தேதி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்குத் திமுக அழைப்புவிடுத்துள்ள”தாக கூறினார். எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதைப் பற்றி பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்படும் என்றார்.
இதனையடுத்து, திமுக கூட்டணியில் த.வா.க வேல்முருகனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் த.வா.க போட்டியிடும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். மேலும் பண்ருட்டி அல்லது நெய்வேலி தொகுதியை ஒதுக்கீடு செய்ய திமுகவிடம் கேட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.