என்எல்சி நிர்வாகம் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்எல்சி சுரங்க விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், இதற்கு என்எல்சியை சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பினை வெளிக்காட்டி வருகின்றனர். எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி மூலமாக 12 கோடி அளவிற்கு லாபம் ஈட்டப்படும் நிலையில், விவசாய நிலம் ஒரு ஏக்கருக்கு 24 லட்சம் ரூபாய் என்ற சொற்ப தொகையே தருகிறார்கள். இது தங்களுக்குப் போதுமானதாக இல்லை.
அதேபோல் நிலம் எடுத்துக்கொண்டு தங்களுக்கு வேலை தருவதாகக் கூறிவிட்டு ஒப்பந்த வேலையை வழங்குகிறார்கள். மேலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்காமல் வடமாநிலத்தவர்களுக்கு அதிக அளவில் வேலை கொடுக்கப்படுகிறது. எனவே நிலத்தை கையகப்படுத்த விடமாட்டோம் எனத் தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கரிவெட்டி எனும் கிராமத்தில் இரண்டாவது முறையாக நில அளவீடு செய்வதற்காக என்எல்சி அதிகாரிகள் வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்த கிராம மக்களும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்பே கடந்த நான்காம் தேதி கரிவெட்டி கிராம மக்கள் என்எல்சிக்கு நிலமெடுப்பதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.