கோப்புப்படம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள இச்சுப்பட்டி என்ற கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் புதிதாக அமைய இருக்கும் ஆலைக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
தாராபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட இச்சுப்பட்டி என்ற கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இரும்பாலை அமைக்கப்படுவதற்கான கட்டுமான பணிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது. இச்சுப்பட்டி கிராமத்திற்கும் வேறொரு கிராமத்திற்கும் இடையில் இந்த புதிய உருக்காலை அமையவிருக்கும் நிலையில், உருக்காலையால் விவசாய நிலங்கள் பாழ்பட்டு விடும், இரு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் அவதிக்குள்ளாவார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஆரம்பத்திலிருந்தே பொதுமக்களும், விவசாயிகளும் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால் அந்த இரும்பு ஆலையை எதிர்ப்பதற்காகவே ஒரு எதிர்ப்பு இயக்கம் உருவாகியுள்ளது. தமிழக அரசின் முறையான அனுமதி பெறாமலும், மாவட்ட நிர்வாகத்தின் விதிகளை கடைப்பிடிக்காமலும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக எதிர்ப்பு இயக்கத்தினர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
கடந்த 3 மாதமாகவே தாராபுரம் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் இச்சுப்பட்டி கிராமமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், நடந்த இரண்டுகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததால் மக்கள் அடுத்தகட்டமாகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அந்த தனியார் ஆலையை மக்கள், விவசாயிகள் இல்லாத இடத்தில் அமைக்க வேண்டும், சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இச்சுப்பட்டி கிராம மக்கள், விவசாயிகள், எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 500-க்கும் மேற்பட்டோர் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.