கோவையில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் முகமூடி அணிந்து கொண்டு 4 நபர்கள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறை இது தொடர்பாக முழு விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் இந்த கொள்ளை கும்பல் தமிழகம் முழுவதும் ரயில் தண்டவாளங்களை ஒட்டியுள்ள வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்தது தெரிய வந்துள்ளது.
கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கொள்ளையில் ஈடுபட்டுள்ள இந்த கும்பல் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபரான மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோவை மாநகரில் மட்டும் 18 கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. வீடுகளை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 68 மேற்பட்ட ஹவுஸ் பிரேக்கிங் (வீடு உடைப்பு) மற்றும் ராபரியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கொள்ளையை அரங்கேற்றிய இந்த கும்பல் விருதுநகரில் நான்கு கோடி ரூபாய்க்கு ஸ்பின்னிங் மில் வாங்கி நடத்தி விஐபிக்களாக சுற்றிவந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மூன்று மாதங்களாக நடைபெற்ற தீவிர தேர்தல் வேட்டைக்கு பிறகு இப்படிப்பட்ட ஒரு கும்பல் பிடிக்கப்பட்டுள்ளது. மூர்த்திக்கு ராட் மேன் என்ற பெயரும் உள்ளதாம். கொள்ளையடிக்க வீட்டின் கதவுகளை உடைக்க ராட் பயன்படுத்தியதால் மூர்த்திக்கு ராட் மேன் என பெயர் வந்துள்ளது என மூர்த்தியை கைது செய்துள்ள ராஜபாளையம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பலரைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.