தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் வரும் செப்.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தமிழக அரசு நேற்று அறிவித்தது. மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரை பகுதிகளுக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மத வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து என்ற உத்தரவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து விழா கொண்டாட அரசு தடை விதித்துள்ளது. விநாயகர் சிலைகளை இல்லங்களிலேயே வைத்துக் கொண்டாட தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் விநாயகர் சிலைகளை தனி நபர்களாக சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மரிய அன்னை பிறந்தநாள் திருவிழாவிற்கு பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்களில் அரசின் கட்டுப்பாடுகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விழாவிற்கான பொருட்களை வாங்கும் மக்கள் முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியுடன் பொருட்களை வாங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கைவினை காகிதக்கூழ், விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மை தயாரிப்பாளர்கள் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் சட்டமன்ற கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கத்தை முற்றுகையிட்டு கைதாகினர்.
இந்த போராட்டத்தில், 'கைவினை கலைஞர்கள், களிமண் சிலை தயாரிப்பாளர்கள் நலனுக்காக தனி வாரியம் அமைக்க வேண்டும்; கரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரிசெய்ய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்; உற்பத்தி செய்யும் பொம்மைகள் மற்றும் கைவினைப் பொருட்களை அரசே கொள்முதல் செய்து நியாமான விலை வழங்கவேண்டும்; ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள சிலைகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
மேலும், விநாயகர் சதுர்த்தி இல்லையென்றால் எங்கள் வாழ்க்கை இல்லை; வழிகாட்டு நெறிமுறைகளுடன் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கொடு;ஆண்டில் ஒரு முறை மட்டுமே வருமானம், இந்த ஆண்டும் இல்லையென்றால்?;ஊரடங்கு தளர்வு எங்கள் தொழிலுக்கு மட்டும் இல்லையா?' தெய்வத் தொழிலை செய்கின்றோம் தெருவில் நிற்க வைக்காதே!!;காவல்துறை நிர்வாகமே பொம்மை தொழிலை முடக்காதே! என்ற கோஷங்களுடன் சட்டமன்ற கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கத்தை முற்றுகையிட்ட நிலையில் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.