Skip to main content

வயநாடு நிலச்சரிவு நிவாரணம்; மொய் விருந்து வைத்த ஜவுளி நிறுவனம்

Published on 16/08/2024 | Edited on 16/08/2024
 Wayanad Landslide Relief; A textile company where Moi had a party

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மொய் விருந்து நடைபெற்றது.

வத்தலகுண்டில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனம் சார்பில் நடைபெற்ற மொய் விருந்து நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகை அறந்தாங்கி நிஷா மற்றும் அறக்கட்டளை நிர்வாகியும், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் மனைவியுமான அருள்மெர்சி செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கு பிரியாணி வழங்கினார்கள்.

வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவு நிவாரணத்திற்காக நடந்த மொய் விருந்தில் வத்தலகுண்டு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று உணவருந்தி விட்டு தங்களால் முடிந்த பணத்தினை நிவாரணப் பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர். விருந்தின் முடிவில் நிவாரண பெட்டியைத் திறந்தபோது ரூபாய் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 430 ரூபாய் பொதுமக்களால் நிவாரணமாக வழங்கப்பட்டிருந்தது.

மொய் விருந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் முகமது அரபாத் கூறுகையில், 'நிவாரண பெட்டியில் மட்டுமல்லாமல் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆன்லைன் மூலம் நிவாரண பணம்  வழங்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார். கேரளா வயநாடு மக்களுக்காக ஜவுளி நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த மொய் விருந்து மூலம் பொதுமக்களால் வழங்கப்பட்ட நிவாரணத் தொகை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

சார்ந்த செய்திகள்