விஜய்யின் 'தி கோட்' திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூ.288 கோடி வசூலித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை, புதுச்சேரி, கேரளா எனப் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்றது. இதில் கேரளாவில் திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியத்தில் படப்பிடிப்பு நடந்த நிலையில் அவரை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டு வந்தனர்.
அந்த வகையில் கன்னியாகுமரியை சேர்ந்த மாற்றுத் திறனாளி ரிஷான் என்ற குழந்தை, விஜய்யை சந்திக்க அவரது குடும்பத்தினருடன் காத்திருந்தார். அப்போது விஜய்யை பார்த்ததும் அக்குழந்தை வீல் சேரில் இருந்து எழுந்து உணர்ச்சிவசப்பட்டு விஜய்யை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார். இதன் பிறகு ரிஷான் மனதளவிலும் உடலளவிலும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரிஷானின் பெற்றோர் மீண்டும் விஜய்யை பார்க்க அவரது நீலாங்கரை வீட்டில் காத்திருந்தனர். ஏற்கனவே விஜய்யை சந்தித்த போது ரிஷானின் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் இருந்ததால் மீண்டும் விஜய்யை சந்திக்க வைக்கலாம் என அவர்கள் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதே போல் கடந்த 2021ஆம் ஆண்டு பிகில் பட காட்சிகளை காட்டி சிறுவர் ஒருவருக்கு இராயபேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.