தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் இன்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி இரு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதனையொட்டி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் கேரளாவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ. 5 கோடியை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நேற்று முதல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச் சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளன. இந்நிலை இன்று (30-07-2024) கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.
அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான கீ.சு. சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்படவுள்ள மீட்புக் குழுவில் தீயணைப்புத் துறையிலிருந்து 20 தீயணைப்பு வீரர்கள் ஒரு இணை இயக்குநர் தலைமையிலும், 20 மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், 10 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய ஒரு மருத்துவக் குழுவினரும் கேரள அரசுடன் மீட்பு மற்றும் மருத்துவச் சிகிச்சைப் பணிகளில் இணைந்து பணியாற்றுவார்கள். இந்தக் குழுவானது இன்றே கேரளாவிற்குப் புறப்பட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.