திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியிலுள்ள ஸ்ரீலட்சுமி திரையரங்கில், விஜய் நடித்த பிகில் வெளியாகியுள்ளது. அத்திரையரங்க வளாகத்தில் விஜய்க்கு மெழுகு சிலை அமைக்கவும், மேளதாளம் வாசித்துக் கொண்டாடவும் அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரிய மனு,உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
சின்னாளபட்டியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் தாக்கல் செய்திருந்த அம்மனுவில் ‘நான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகன். விஜய் மக்கள் இயக்கத்திலும் உறுப்பினராக இருக்கிறேன். விஜய் நடித்த திகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதனை விமரிசையாகக் கொண்டாடும் வகையில், சின்னாளபட்டி ஸ்ரீலட்சுமி திரையரங்க வளாகத்தில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை அமைப்பதென்றும், மேளதாளங்கள் இசைத்து கொண்டாடிடவும் முடிவு செய்தோம். அத்திரையரங்கின் உரிமையாளரும் அனுமதி அளித்துள்ளார். அக்டோபர் 24-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை அமைதியான முறையில் கொண்டாடிட முடிவெடுத்தோம். திரையரங்க வளாகத்திலேயே கொண்டாட்டத்தை நடத்துவதால், எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனையோ, பொது அமைதிக்கு பங்கமோ வராது. இது சம்பந்தமாக, திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளரிடம் அக்டோபர் 22-ஆம் தேதி மனு கொடுத்தோம். இதுவரை அனுமதி அளிக்கவில்லை. எனவே, கொண்டாட அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி இளந்திரையன், திண்டுக்கல் ஸ்ரீலட்சுமி திரையரங்கு உரிமையாளரையும் வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்த்திடும்படி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.