வருமான வரித்துறை மறுமதிப்பீடு தொடர்பாக சேகர் ரெட்டி, மாதவராவ் ஆகியோரிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, அவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
2017- ஆம் ஆண்டு ஏப்ரலில் ஆர்.கே.நகர் இடைதேர்தலின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையின் அடிப்படையில், அவரது 2011-12 முதல் 2018-19- ஆம் ஆண்டு வரையிலான வருமான வரி கணக்குகளை வருமான வரித்துறை மறு மதிப்பீடு செய்து வருகிறது. அந்த நடைமுறையில் உள்ள 12 சாட்சிகளில் 5 பேரை மட்டுமே விஜயபாஸ்கர் தரப்பு குறுக்கு விசாரணை செய்ய வருமான வரித்துறை அனுமதித்த நிலையில், மீதமுள்ள சேகர் ரெட்டி, சீனிவாசுலு, மாதவ் ராவ், முகமது அப்துல்லா, கிரிட்லைன் சர்வே நிறுவனத்தின் பொறியாளர், மதிப்பீடு அதிகாரி ஆர்.கோபாலகிருஷ்ணன், புதுக்கோட்டை ஆர்.வெங்கடேசன் ஆகிய 7 பேரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க உத்தரவிடக்கோரியும், தனக்கு எதிராக திரட்டபட்ட ஆவணங்களின் நகல்களை வழங்கக் கோரியும் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், தனது மனுவில், வருமான வரித்துறையிடம் மார்ச் 13- ஆம் தேதி முதல் டிசம்பர் 11- ஆம் தேதி வரை 10 முறை மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை என கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (20.12.2019) நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறையின் நிலைப்பாடு ஒரு அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அதில், சேகர் ரெட்டி, மாதவராவ், புதுக்கோட்டை வெங்கடேசன் ஆகியோரிடம் எவ்வித தகவலையோ, வாக்குமூலத்தையோ பெறவில்லை என்பதால் அவர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் குறுக்கு விசாரணை செய்ய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சீனிவாசுலு உள்ளிட்ட நால்வரிடம் குறுக்கு விசாரணை செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் விஜயபாஸ்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூவரிடம் குறுக்கு விசாரணை செய்யாவிட்டாலும், அவர்களிடம் பெறப்பட்ட ஆவணங்களை தங்களுக்கு தர வேண்டுமென வாதிட்டார். தங்களுக்கு நோட்டீஸ் கூட கொடுக்காமல் மறுமதிப்பீடு நடைமுறை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, குறுக்கு விசாரணை செய்ய அவகாசம் நிர்ணயிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, நோட்டீஸ் கொடுக்காதது தொடர்பாக இந்த வழக்கு தொடரப்படவில்லை என்றும், குறுக்கு விசாரணை அவகாசம் குறித்த விவகாரத்தில் வருமான வரித்துறையும், அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பும்தான் முடிவெடுக்க வேண்டுமெனவும், அது நீதிமன்றத்தின் வேலை இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், 7 சாட்சிகளில் 4 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்த வருமான வரித்துறை விளக்கத்தை ஏற்று அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கை முடித்துவைப்பதாக உத்தரவிட்டுள்ளார்.