2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அல்லது நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரிக்கு பிரதமர் வந்துள்ளார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக விவேகானந்தர் கல்லூரிக்கு வந்த அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
தொடர்ந்து மேடையில் பேசிய பிரதமர் மோடி, 'தமிழ் சகோதர சகோதரிகளே நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை கிளம்பி இருக்கிறது. பாஜக கன்னியாகுமரியை நேசிக்கிறது. குடும்ப ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நாட்டை பிளவுபடுத்த நினைத்த மக்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டனர். திமுக காங்கிரஸ் கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி எடுபடாது. கொள்ளையடிப்பதை கொள்கையாகக் கொண்டது திமுக கூட்டணி. ஆட்சிக்கு வந்து கொள்ளையடிப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது திமுக-காங்கிரஸ் கூட்டணி. திமுக காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஊழல் நடைபெற்றது. ஹெலிகாப்டர் ஊழல் பட பல்வேறு முறைகேடுகள் திமுக காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றது. ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி தமிழக மக்கள் காண தடை விதித்த கட்சி திமுக. சனாதனத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது'' என பேசி வருகிறார்.
இந்த ஆண்டில் மட்டும் ஐந்தாவது முறையாக தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வந்திருக்கிறார். மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அண்மையில் பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.