வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்பட்டு வந்த நிலையில் தற்போது விளம்பரம் மற்றும் வியாபாரம் மேற்கொள்வதற்கான தளமாகவும் இயங்கி வருகிறது. அதேபோல் வாட்ஸ் அப் மூலம் மோசடிகள் அரங்கேறி வரும் சம்பவங்களும் ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம்தான் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இந்திரபிரகாஷ் என்பவரின் செல்ஃபோன் எண் திடீரென முன்பின் தெரியாத ஒரு வாட்ஸ்அப் குழுவுடன் இணைக்கப்பட்டது. இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத இந்திரபிரகாஷ் அந்தக் குழுவில் இருந்து வெளியே வராமல் நீடித்துள்ளார். இந்த நிலையில் திடீரென அந்தக் குழுவில் நிறைய ஆடைகள் குறைந்த விலையில் கிடைப்பதாக விளம்பரங்கள் புகைப்படங்களுடன் வரத் தொடங்கின. இதனால், நிறைய ஆடைகளைக் குறைந்த விலையில் வாங்கலாம் என நம்பி அந்த வாட்ஸ்அப் குழுவின் அட்மின் கொடுத்த விளம்பரங்கள் உண்மையா அல்லது இந்த விளம்பரங்களை வெளியிட்டவர் நம்பகத்தன்மை உடையவரா என்பதை பற்றியெல்லாம் யோசிக்காத இந்திரபிரகாஷ், அந்தக் குழுவின் அட்மின் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு பணத்தைச் செலுத்தியுள்ளார்.
வீடு தேடி ஆடைகள் வரும் என நினைத்துக் கொண்டிருந்த, இந்திரபிரகாஷ்க்கு ஏமாற்றமே மிஞ்சியது. சில நாட்கள் ஆகியும் எந்த விதமான ஆடைகளும் வீட்டிற்கு வராத நிலையில், சந்தேகமடைந்த இந்திர பிரகாஷ் வாட்ஸ்அப் குழுவில் அட்மினை தொடர்பு கொண்டபோது அந்த எண் அணைக்கப்பட்டு இருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இந்திரப் பிரகாஷ் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்க, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த வாட்ஸ் அப் குழுவை நிர்வகிப்பவர் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. முகநூல் பக்கத்தில் மொபைல் எண்ணை வெளிடுபவர்களைக் குறிவைத்து அவர்களது எண்ணை சேகரித்து வாட்ஸ் அப் குழுவை உருவாக்கியுள்ளார் ராஜேந்திரன். அந்தக் குழுக்களில் இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட்டு, ஏமாற்றி பணமோசடி செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுபோல் நூற்றுக்கு மேற்பட்டோரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைதான ராஜேந்திரனிடம் இருந்து 6 சிம்கார்டுகள் மற்றும் செல்ஃபோன்களை பறிமுதல் செய்துள்ள காவல்துறை, முன்பின் தெரியாத குழுக்களில் மொபைல் எண் இணைக்கப்பட்டால் அலட்சியமாக எடுத்துகொள்ளக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.