நகரம் முதல் கிராமபுறங்கள் வரை தர்பூசணி பழத்தின் விற்பனை படு ஜோராகியிருக்கிறது, கோடை வெயிலின் உடல் சூட்டைத் தணிப்பதற்கு தர்பூசணி பழத்தை பருகுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டியே வருகின்றனர்.
கோடைகாலம் தொடங்கிய நாள்முதல் நாகை, திருவாரூர், தஞ்சை, காரைக்கால் பகுதிகளில் வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. விவசாயிகள் முதல் ஏசியில் இருக்கும் அதிகாரிகள் வரை உஷ்ணத்தால் அல்லல்பட்டு வருகின்றனர். அதோடு வயிற்றுப்போக்கு, மஞ்சல் காமாலை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகிவருகின்றனர். ஆக உடல் சூட்டை தணிக்க இளநீர், பழச்சாறுகள் என தேடினாலும், குறைந்த விலையில் இயற்கையுடன் கூடிய மருத்துவ குணம் கொண்ட தர்பூசணி பழங்களையே மக்கள் அதிகம் விரும்பி செல்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஒட்டம்பட்டு, அருணாவரம், தண்றை, வீரபாண்டி, வைப்பூர், திருக்கோவிலுார், நாகை மாவட்டம் திருநகரி, கொள்ளிடம் உட்பட பல பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தர்பூசணி பழங்கள், தற்போது பல பகுதிகளிலும் அதிக அளவில் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். கோடை வெயிலின் தாகத்தை தணிக்க தர்பூசணி ஜுஸ் விற்பனை டெல்டா பகுதிகளில் அமோகமாக நடைபெறுகிறது. குழந்தைகள் மற்றும் வயதான முதியவர்கள் தர்பூசணி ஜுஸ் பருகி வெயிலில் தாகத்தை தணித்து வருகின்றனர்.
இதுகுறித்து தர்பூசணியை ருசித்துக்கொண்டிருந்த இளையராஜா கூறுகையில், "கோடை வெயில் அதிகமாக இருக்கிறது, கத்திரி வெயில் துவங்குவதற்குள் வெயிலின் உஷ்ணம் அதிகரித்துவிட்டது. உடலில் ஏற்பட்டிருக்கும் உஷ்ணத்தைப்போக்க இளநீர் குடிக்கலாம் என்றால் 35 ரூபாய் ஆகிறது. மாதுளை, சாத்துக்குடி கரும்பு ஜூஸ், குடிக்கலாம் என்றால் முப்பது ரூபாய்க்கு மேல் ஆகிறது. ஏழைக்கேத்த எள்ளுருண்டை போல் ஐந்து ரூபாய்க்கு ஒரு பீஸ் தர்பூசணி பழம் கிடைக்கிறது. அதனால் அதை நாடி செல்கிறோம் இது இல்லை என்றால் எங்களின் கதி அவ்வளவுதான்" என்று கூறுகிறார்.