பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுகள் அரசு சார்பிலும், மருத்துவர்கள் சார்பிலும் தொடர்ந்து மக்களுக்கு கொடுக்கப்பட்டுவருகிறது. இந்தக் கரோனா நேரத்தில் கரோனா தடுப்பு பொருட்களான முகக்கவசம், சானிடைசர் போன்றவை அதிக விலைக்கு விற்கப்படுவதும் அதேபோல் போலியாக விற்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறத்தான் செய்கிறது. ஆனால் கடையில் வெறும் பச்சை தண்ணீரை சானிடைர் என வைத்திருந்த சம்பவம் சிவகங்கையில் நிகழ்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி உத்தரவின்படி, கரோனா மூன்றாம் அலை தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே நேற்று (20.07.2021) வட்டாட்சியர் திருநாவுக்கரசு தலைமையில் அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் கரோனா தடுப்பு முறைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அங்குள்ள துணிக்கடை ஒன்றில் சானிடைசர் என்று வெறும் நீரை வைத்திருப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த துணிக்கடைக்குச் சென்று, கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த சானிடைசரை ஆய்வுசெய்தனர். ஆய்வில், அது வெறும் நீர் என்பதை அதிகாரிகள் உறுதிசெய்த நிலையில், அதிகாரிகள் அந்தக் கடையை மூடி சீல் வைத்துச் சென்றனர்.