வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்காக முதற்கட்டமாக 1500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி மற்றும் மதுரை ஆகிய இரண்டு மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வைகை அணையின் பிரதான ஏழு மதகுகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.