நேற்று சேலம் வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சேலம் நகரப் பேருந்து நிலையத்தில் 96 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்குப் பேருந்து நிலையத்தைத் தமிழக முதல்வர் தற்போது திறந்து வைத்தார்.
தொடர்ந்து சேலம் கருப்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்திற்கு 2,352 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு மேடையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி நம்முடைய கலைஞர். அவருடைய நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை தொடங்கக்கூடிய இந்த நேரத்தில் சேலம் மாநகரில் அவருடைய திருவுருவச் சிலையை நான் திறந்து வைத்துவிட்டு ஒரு மனநிறைவோடு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 27-8-2019 அன்று திமுக சார்பில் கலைஞரின் சிலை திறந்து வைக்கப்பட்டது. இப்பொழுது மாநகராட்சி சார்பில் அண்ணா பெயரில் உள்ள பூங்காவில் கலைஞரின் சிலை திறக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் பூங்காவில் பூத்த மனம் தரும் மலர் தான் கலைஞர். சேலத்திற்கும் கலைஞருக்குமான நட்பு என்பது அன்பான நட்பு. ஒரு குடும்ப நட்பு. கலைஞர் ஒரு முழு கதை வசனகர்த்தாவானது இந்த சேலத்தில் தான்'' என்றார்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு டெல்டா குறுவை பாசனத்திற்காக நீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நிலங்கள் பாசன வசதி பெறும். குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி வரை என மொத்தம் 220 நாட்களுக்குத் தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் இன்று ஜூன் 12 ஆம் தேதி, மேட்டூர் அணையில் நீர்ப்பாசனத்திற்காகத் தமிழக முதல்வர் தண்ணீர் திறந்து வைக்க இருக்கிறார். தமிழக முதல்வர் மேட்டூர் வர இருப்பதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மேட்டூர் அணை காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.