ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் என்.ரவி, 1500 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேரை திரட்டி சோளிங்கரில் 'கண்ணீரை தவிர்க்க தண்ணீரை சேமிப்போம்' என்கிற தலைப்பில் ஜீன் 23ந் தேதி மிப்பெரிய ஊர்வலத்தை நடத்தினார்.
இந்த ஊர்வலத்தில் நாட்டுப்புற நடனங்கள் மூலம் தண்ணீர் தேவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலத்தில் வீதிக்கு வீதி மரம் வளர்ப்போம், வீட்டுக்கு வீடு மழை நீர் சேகரிப்போம் என்கிற வாசகங்கள் அடங்கிய தட்டி பிடித்தப்படி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
ஊர்வலத்துக்கு பின்னர், 'வீடு தேடி வரும் தண்ணீர்' என்கிற பெயரில் ரஜினி மக்கள் மன்றம் தினமும் ஒவ்வொரு வீட்டுக்கும் 25 லிட்டர் கேன் தண்ணீரை இலவசமாக வழங்கும் நிகழ்வை தொடங்கிவைத்தது. அதோடு, தினமும் 5 ஆயிரம் லிட்டர் கொண்ட தண்ணீர் லாரி, தண்ணீர் இல்லை எனச்சொல்லப்படும் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் செல்லும். மக்கள் தேவையான தண்ணீரை பிடித்துக்கொண்டு அதனை அடுத்தப் பகுதிக்கு அனுப்ப வேண்டும் என திட்டமிட்டு சொந்தமாக ஒரு தண்ணீர் லாரியை வாங்கி மக்கள் பயன்பாட்டுக்கு விட்ட நிகழ்வும் நடைபெற்றது.
பிரதான கட்சிகள் மிரளும் அளவுக்கு மக்கள் திரள், தண்ணீர் வழங்குவது போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள ரஜினி மக்கள் மன்றத்தின் மா.செ. சோளிங்கர் ரவியிடம் பேசியபோது, தண்ணீர் தரவில்லை என குற்றம்சாட்டுவதற்கு பதில், நீர் உற்பத்திக்கும், மேலாண்மைக்கும் மக்களாகிய நாம் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். மரம் வளர்ப்பது, மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது, சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவது, பாதுகாப்பான குடிநீர் போன்ற பிரச்சாரங்கள் மூலம் நீர் சேமிக்க முடியும். இதன் மூலம் வருங்கால தலைமுறைக்கு நாம் நல்ல வாழ்க்கையை அமைத்து தர முடியும். நாமும் தண்ணீரில் இல்லையே என நிகழ்காலத்தில் கண்ணீர் விடாமல் மகிழ்ச்சியாக வாழலாம். அதற்காக தான் விழிப்புணர்வு ஊர்வலமாக மன்றத்தின் சார்பில் நடத்தினோம்.
மாற்றம் என்பது திணித்தால் வராது, அவர்கள் உணர்ந்தால் மட்டுமே அது சாத்தியம். அதனால் தான் மக்களிடம் செல்லலாம் என திட்டமிட்டு செயலாற்றுகிறோம். நிச்சயம் மக்கள் மனதில் மாற்றம் ஏற்படும். சிக்கனமாக நீரை பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியதை அவர்கள் கடைப்பிடிப்பார்கள். அதேபோல் விழிப்புணர்வோடு நின்றுவிடக்கூடாது என்பதால் தற்காலிகமாக இலவச குடிநீர் மற்றும் லாரிகளில் தண்ணீர் வழங்குகிறோம். எங்களால் முடிந்தவரை வழங்குவோம் என்றார்.