திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே தேவூர் கைகாட்டி புதூர் பகுதியை அடுத்த தேவேந்திரன் நகரில் பட்டியலின மக்கள் வசிக்கின்றனர். இந்த நகருக்கு அருகே வி.ஐ.பி கார்டன் பகுதியில் வேறு ஒரு சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
தேவேந்திரன் நகரில் வசிக்கும் மக்கள், ரேஷன் கடை, இ-சேவை மையம், பள்ளி மற்றும் மற்ற தேவைகளுக்கு வி.ஐ.பி நகர் வழியே தான் செல்ல முடியும். ஆனால், தேவேந்திரன் நகரில் வாழும் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக அந்த வழியே செல்ல முடியாத வகையில் வி.ஐ.பி நகர் பகுதியில் திண்டாமை சுவர் எனப்படும் சுவர் எழுப்பி இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சுவர் 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வாழும் மக்கள் அரசு சாலையை பயன்படுத்த முடியாமல் அதிக தொலைவு நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தீண்டாமை சுவர் எனப்படும் இந்த சுவரை இடித்து வழி ஏற்படுத்த வேண்டும் என தேவேந்திரன் நகர் மக்கள் அரசு அதிகாரிகளிடம் பல நாட்களாக மனு அளித்து இருந்தனர். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கை குழு தயாரிப்பு குழு கூட்டத்திற்காக திருப்பூர் மாவட்டத்திற்கு வந்த கனிமொழி எம்.பியிடம் தேவேந்திரன் நகரில் வாழும் பெண்கள் சந்தித்து புகார் மனு அளித்தனர். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி இந்த சுவரின் ஒரு பகுதியை இடித்து அகற்றப்பட்டுள்ளது.