ஈரோட்டில் சந்தை வியாபாரத்திற்காக வந்த விவசாயிகள் சுவர் இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் வாரந்தோறும் திங்கட்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு அருகிலுள்ள மலைக்கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்களது பயிர்கள் மற்றும் காய்கறிகளை விற்பதற்காக வருவது வழக்கம். கடந்த மூன்று மாதங்களாக கரோனாவால் முடக்கப்பட்டிருந்த சந்தையில் தற்போது வியாபாரம் மீண்டும் துவக்கியுள்ளது. கரோனா ஊரடங்கிற்குப் பிறகு இன்று மீண்டும் அந்தியூர் சந்தை தொடங்கியுள்ள நிலையில், நேற்று இரவே பர்கூர் மலைப்பகுதியில் இருந்து 6 விவசாயிகள் தங்களது தானியங்களை விற்க அந்தியூர் வந்துள்ளனர்.
அங்கு மழை பொழிந்ததால் இவர்கள் 6 பேரும் அந்தியூர் தேர் வீதியில் உள்ள ஒரு கடையின் முன்பு தானியங்களை வைத்துவிட்டு ஓய்வெடுத்த நிலையில், அந்த கடையின் பழமையான சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரே ஊரைச் சேர்ந்த சித்தன், மகாதேவன், சின்னப்பையன் ஆகிய மூவரும் உயிரிழந்த நிலையில், ராஜேஷ், சிவமூர்த்தி, மகேந்திரன் ஆகியோர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர்கள் மூவரும் தற்போது மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.