கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.டி.ஐ அப்பரண்டிஸ் பயிற்சி முடித்து, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்; அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் முன்னிலையில் ஏற்றுக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்; ஐ.டி.ஐ அப்ரண்டிஸ் பயிற்சி முடித்த நபர்களுக்கு உண்டான காலி பணியிடத்தை, அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா திடலில் குடும்பத்தோடு 500க்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் அப்ரன்டிஸ் பயிற்சி முடித்தவர்களைத் தவிர்த்துவிட்டு இயந்திரங்களை இயக்குவதால் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் விபத்துகள் அதிகளவு நடைபெறுகின்றது என்றும், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பயிற்சி முடித்த அப்பரண்டிஸ்கள் மாற்றம் செய்யப்பட்டதால் வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை என்றும், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் வேலை இழப்பால் குடும்பத்தை நடத்த முடியாமல் வறுமையில் வாடுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் தங்களுடன் சமகாலத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு மற்ற பொதுத்துறை நிறுவனத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பே நிரந்தர வேலை வழங்கப்பட்டவிட்டது என்றும், இதுபோல் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு துறைகளிலும் பயிற்சி முடித்தவர்கள் வேலைக்கு சேர்ந்து விட்டனர்.
என்.எல்.சி. இந்திய நிறுவனம் கடந்த 24 ஆண்டுகளாக பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வழங்காததால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில், ஜனவரி 6ஆம் தேதி முதல் கவன ஈர்ப்பு போராட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு விதங்களாக போராடி வரும் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களிடம், என்.எல்.சி. நிர்வாகத்தின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், குடும்பத்துடன் சுட்டெரிக்கும் வெயிலில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அப்பாவிற்கு வேலை வழங்க வேண்டும், கணவனுக்கு வேலை வழங்க வேண்டும், மகனுக்கு வேலை வழங்க வேண்டும் என பல்வேறு பதாகைகளை கையில் பிடித்துக் கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் நெய்வேலி நகரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.