சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி மணக்காடு முஸ்தபாவை காவல்துறையினர் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் தாதுபாய்குட்டையைச் சேர்ந்தவர் சித்துராஜ். அந்தப்பகுதியில் உள்ள டிடி சாலையில் கடந்த அக். 17ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி மற்றும் தீபாவளி பண்டிகை செலவுக்காக சட்டைப்பையில் வைத்திருந்த 10200 ரூபாய் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து சேலம் நகர காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் விசாரித்து வந்தனர். சேலம் மணக்காடு அன்பு நகரைச் சேர்ந்த நூர் அஹமது மகன் ரவுடி முஸ்தபா (26) என்பதும், அவருடைய கூட்டாளிகள் கிருபாகரன், வெள்ளையன் ரமேஷ் ஆகியோரும் சேர்ந்து முத்துராஜிடம் வழிப்பறியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், கடந்த 11.1.2019ம் தேதி, முஸ்தபாவும் அவருடைய கூட்டாளி பிரகாஷ் என்பவரும் ராஜாராம் நகரில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து கத்தி முனையில் 6 பவுன் சங்கிலி பறிப்பிலும், 16.10.2019ம் தேதி அண்ணா பூங்கா அருகே, கார்த்திகேயன் என்பவரை வழிமறித்து, அவர் ஓட்டிவந்த 1.15 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற குற்றத்திலும் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது.
சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் மணக்காடு முஸ்தபாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறையினர், சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து ஆணையர், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். கைது ஆணையை, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்தபாவிடம் நேரில் சென்று சார்வு செய்தனர். இவர் ஏற்கனவே 2017ல் ஒருமுறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதும், தற்போது இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் பிடிபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.