தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி வாக்குப் பதிவானது நடந்து முடிந்தது. அதன்பின் தேர்தல் ஆணையம் மற்ற மாநிலங்களில் தேர்தலை நடத்தி முடித்துள்ள நிலையில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதன்படி நாளை வாக்குகள் எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தயார் நிலையில் உள்ளது.
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிகளுக்குகான வாக்கு எண்ணிக்கை ஜமால் முகமது கல்லூரியிலும், ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும், மண்ணச்சநல்லூர், லால்குடி சட்டமன்றத் தொகுதிகளுக்கு சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியிலும், முசிறி, துறையூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு துறையூர் இமயம் கல்லூரியிலும் வாக்குப்பதிவு எண்ணும் பணிநாளை நடைபெற உள்ளது.
ஒவ்வொரு தொகுதி வாக்குகளும் 14 மேஜைகளில் எண்ணப்படும். அதில் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர், நுண் பார்வையாளர் என மூன்று பேர் அதில் இடம்பெறுவார்கள். திருச்சியில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில் 459 ஊழியர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.
நாளை காலை 8 மணிக்கு துவங்கும் வாக்கு எண்ணிக்கையானது பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்றுக்கான நிலவரமும் அறிவிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கக்கூடிய காவல்துறையினர் சுழற்சி அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.