Skip to main content

தெற்கு ஆசிய கைப்பந்து போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய கேப்டனுக்கு உற்சாக வரவேற்பு!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

 

நேபாளத்தில் நடந்து வரும் 13 வது தெற்கு ஆசிய விளையாட்டுப்  போட்டிகளில் 3 ந் தேதி நடந்த கைப்பந்து போட்டியில்  பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு வெற்றி வாகை சூடிய கைப்பந்து அணியின் கேப்டன் ஜெரோம் வினித் (27), சிறந்த ஆட்ட நாயகன் பதக்கமும்  பெற்றார்.  

 

Captain-Jerome vinith



இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து கேப்டன் ஜெரோம் வினித், பயிற்சியாளர் ஸ்ரீதர் உள்பட 4 பேர் பங்கேற்றனர். இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. வெற்றிக் கோப்பையை வாங்கிய கையோடு கேப்டன் ஜெரோம் வினித் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைக்காடு கிராமத்திற்கு வந்தார். அவருக்கு கிராமத்தினர் சார்பில் மங்கள வாத்தியங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சொந்த மண்ணில் கால் வைத்ததும் அவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து வரவேற்று நெகிழ்ந்தனர் பெண்கள். பள்ளி மாணவ, மாணவிகள் கரகோஷங்கள் நடுவே சால்வைகள், மாலைகள் அணிவித்து கிராம மக்கள் வரவேற்றனர்.இதன் பின்னர் வினித் சொந்த மண்ணில் இறங்கி தேவாலயம் சென்று மண்டியிட்டு வணங்கிய பிறகு மெழுகுவர்த்தி ஏற்றினார். 

 

 

Captain-Jerome vinith



இதனையடுத்து அவருக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியைகள், தற்போதைய ஆசிரியைகள், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் குழு படங்களும் செல்பிகளும் எடுத்துக் கொண்டனர். அதே மேளதாளங்களுடம் கிராம மக்கள் ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். கோட்டைக்காடு என்றும் சிறிய கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளியின் மகனாக பிறந்து கிராமத்து பள்ளிகளில் பள்ளிப் படிப்பை முடித்து பாலிடெக்னிக் ஒரு வருடம், பி.ஏ. ஆங்கிலம் ஒரு வருடம் பி.பி.ஏ என்று என்று அடுத்தடுத்து கல்லூரிகள் மாறிக் கொண்டே இருந்துள்ளார்.

விளையாட்டில் மிக ஆர்வமாக உள்ளார் என்பதால் எஸ்.ஆர்.எம். கல்லூரி அவரை அழைத்துக்கொண்டது. பின்னர் அவரது அயராத உழைப்பை பார்த்து பாரத் பெட்ரோலியம் அணி அழைத்துக் கொண்டது. கொச்சியில் தங்கி இருந்து தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டு இந்திய அணிக்குள் நுழைந்து தற்போது கேப்டனாவும் தொடர்ந்து வெற்றி வாகையும் சூடியுள்ளார். 

வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் பேசும் போது, "கிராமத்து குழந்தைகள் தான் அதிகம் சாதிக்க முடியும். அதற்கு அவர்களின் பெற்றோர், பள்ளி உற்சாகமும், ஊக்கமும் கொடுக்க வேண்டும். அப்படித் தான் என்னால் சாதிக்க முடிந்தது. கோட்டைக்காடு என்ற கிராமம் வெளியே தெரியாமல்  இருந்தது. ஆனால் இன்று வெளியுலகிற்கு தெரிகிறது. அதனை நினைத்து பெருமைப்படுகிறேன். 

பாகிஸ்தானுடன் மோதும் போது இந்திய அணி வெல்லும் என்ற ஒரே இலக்கோடு பயணித்து வென்றோம். அடுத்த இலக்கு ஒலிம்பிக். அதற்கான தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் சீனாவில் நடக்கிறது. இந்திய கைப்பந்து அணி கலந்து கொள்கிறது. அதில் தேர்வாகி நிச்சயம் ஒலிம்பிக் சென்று வென்று வருவோம் என்றார். மேலும் மாணவர்கள் படிப்பையும், விளையாட்டையும்  இரு கண்களாக பார்க்க வேண்டும் என்று அழுத்தமாக தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்