திருச்சி மத்திய சிறையில் உள்ள 35 சிறைவாசிகளுக்கு IOB- RSETI நிறுவனம் சார்பில் பல்வேறு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பயிற்சி பெற்ற 35 சிறைவாசிகளுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருச்சி மத்திய சிறையில் உள்ள 35 சிறைக் கைதிகளுக்கு கடந்த 3ஆம் தேதி துவங்கி 15ஆம் தேதிவரை துரித உணவு சமைப்பது, அவற்றை விநியோகிப்பது, வங்கி சேவைகள் மற்றும் நிதி ஆலோசனைகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சியை நிறைவுசெய்த கைதிகளுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய சான்றிதழ்களும் நேற்று (15.11.2021) வழங்கப்பட்டன.
IOB- RSETI நிறுவனம் சார்பில் அதன் இயக்குநர் அகல்யா மற்றும் சிறைத்துறை துணைத் தலைவர் கனகராஜ், சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிலா, உதவி தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜோசப் அந்தோணிராஜ், மதிப்பீட்டாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இந்தப் பயிற்சி முகாமில் கைதிகளுக்கு சிறப்பான பயிற்சிகளை வழங்கி அவர்களை ஒரு சிறந்த தொழில் முனைவோர்களாக மாற்றியுள்ளனர்.
இந்நிறுவனம் ஆண்டுதோறும் இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்திவருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் முதல்முறையாக திருச்சி மத்திய சிறையில் இந்தப் பயிற்சியானது வழங்கப்பட்டு கைதிகளும் சிறந்த தொழில் முனைவோர் ஆகலாம் என்ற தன்னம்பிக்கையை வழங்கியுள்ளது.