Skip to main content

விஷால் தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் சேரனின் போராட்டம்!

Published on 05/12/2017 | Edited on 05/12/2017
விஷால் தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் சேரனின் போராட்டம்!
 
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலகும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என நடிகர் சேரன் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். இதனிடையே சேரனுடன் விஷால் தரப்பு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான நடிகர் விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவினை விஷால் நேற்று தாக்கல் செய்தார். இதனிடையே விஷால் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு நடிகர் சேரன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிடுவதும், அவரின் பல தொடர் நடவடிக்கைகளும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிக்கும் வகையில் உள்ளது. இது எதிர்காலத்தில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தயாரிப்பாளர்களுக்கும், சங்கத்திற்கும் எவ்வித ஒத்துழைப்பும் கொடுக்க முடியாத சூழலை உருவாக்கும். இதனால் தயாரிப்பாளர்களின் நிலை மட்டுமல்லாமல் திரை உலகமே ஒட்டுமொத்தமாக முடங்கும். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட வேண்டும் என கூறி தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடிகர் சேரன் நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்.

2வது நாளாக இன்றும் தனது உள்ளிருப்பு போராட்டத்தை தொடரும்
சேரன், விஷால் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்தநிலையில் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் உதயா, அன்பு, கஃபார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

மேலும் விஷால் நேரில் வந்தால் தான் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் என சேரன் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனிடையே சேரனின் இந்த போராட்டத்திற்கு ராதிகாவும், ராதாரவியும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்