விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு அமமுக வேட்பாளர் கிடைப்பதற்குள் திணறித்தான் போனார் டிடிவி தினகரன். பயில்வான் கு.கிருஷ்ணசாமி தேவர் குடும்பத்தில் சந்தோஷ் என்பவரை நிறுத்தப் போகிறார் என்றும் அமமுக விருதுநகர் மாவட்ட மாணவர் அணி தலைவர் பிரதீப் வீரணன்தான் வேட்பாளர் என்றும் பேச்சு அடிபட்டது. ரூ.10 கோடியைக் கண்ணில் காட்டினால்தான் வேட்பாளராக முடியும் என்றும், அந்தத் தொகையையும், அதைக்காட்டிலும் அதிகமாக கட்சி தரும் தொகையையும் முழுமையாகச் செலவழிக்க வேண்டுமென்று கறார் காட்டியதால், ‘அய்யோ ஆளைவிடுங்க’ என்று எஸ்கேப் ஆகிவிட்டார்களாம், வேட்பாளர் தேர்வில் இருந்த அந்த இருவரும்.

அமமுக ஆதரவு வாக்குகள் கணிசமாக உள்ள தொகுதி விருதுநகர். அதிமுக கூட்டணியில் நிற்பது பிற சமுதாயத்தைச் சேர்ந்த தேமுதிக வேட்பாளர் என்பதால், முக்குலத்தோர் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்வதன் மூலம், அமமுகவுக்கு ஒரு எம்.பி. கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கை தினகரனுக்கு இருக்கிறது. அதனால்தான், வெயிட்டான வேட்பாளரைத் தேடினார்.
அப்படி ஒருவர் கிடைக்காத நிலையில், அமமுக தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜாவின் மருமகன் அய்யப்ப பரமசிவனை வேட்பாளராக அறிவித்திருக்கிறது அக்கட்சி. நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் இவர், மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். மீண்டும் திமுகவில் ஐக்கியமாகிவிட்ட நெல்லை மாவட்ட சீனியர் அரசியல்வாதியான ‘கானா’ என்றழைக்கப்படும் கருப்பசாமி பாண்டியனின் அண்ணன் மகன்தான் அய்யப்ப பரமசிவன்.

திருநெல்வேலை மாவட்டம் – பாளையங்கோட்டை – திருத்து கிராமத்தைச் சேர்ந்த சங்கரசுப்புவின் மகனான அய்யப்ப பரமசிவன் பொறியியல் படித்திருக்கிறார். வீரபாண்டியன் மஹால் மற்றும் வீரமணிகண்டன் ரைஸ்மில் நடத்திவருகிறார். 2006 முதல் 2016 வரை பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில், 20-வது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினராக இருந்திருக்கிறார். தற்போது, கழக அம்மா பேரவை இணைச்செயலாளராக இருக்கிறார்.
வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், விருதுநகர் தொகுதியிலுள்ள கட்சியினரை அரவணைத்துச் செல்வதும், வாக்காளர்களைக் கவர்வதும் அய்யப்ப பரமசிவனுக்கு பெரும் சவாலாக உள்ளது.