சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கிரண்குமார் என்பவர் பெண் வீட்டிற்கு போன் செய்து எனக்கு எய்ட்ஸ் இருக்கு திருமணத்தை நிறுத்திய சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரை சேர்ந்தவர் கிரண் குமார். இவருக்கு வயது 30. இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த கீர்த்தனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. இவர்களுடைய நிச்சயதார்த்தம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் கிரண்குமாருக்கும், கீர்த்தனாவிற்கும் டிசம்பர் 1-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அப்போது திடீரென்று பெண் வீட்டாருக்கு போன் செய்து தன்னுடைய பெயருக்கு என்ன கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என நினைத்து, தனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கூறியுள்ளார். அதனால் என்னை உங்கள் வீட்டு பெண் திருமணம் செய்து கொண்டால் அவளுக்கும் இந்த நோய் பாதிப்பு வரும் என்று கூறியுள்ளார். மாப்பிள்ளை போனில் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகள் குடும்பத்தார் பெண் பார்க்கும்போதே சொல்லி இருந்தால் எந்த ஏற்பாடும் செய்யாமல் இருந்திருக்கலாமே என கூறியுள்ளனர்.
இதனால் மணமகன் வீட்டிற்கும், மணமகள் வீட்டிற்கும் இடையே பிரச்சினை ஆரம்பித்துள்ளது. அப்போது என் மகனுக்கு எய்ட்ஸ் இல்லை வேண்டும் என்றால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பாருங்கள் என்று மணமகன் வீட்டார் கூறியுள்ளனர். பின்பு கிரண்குமாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று எச்.ஐ.வி பரிசோதனை செய்தனர். அப்போது தான் கிரண்குமாருக்கு எய்ட்ஸ் இல்லை என்றும், அவர் கூறியது பொய் என அனைவருக்கும் தெரிந்தது.
அதன் பின்பு கிரண்குமாரிடம் இரு வீட்டாரும் விசாரித்த போது திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் கடுப்பான பெண் வீட்டார் விருப்பம் இல்லையென்றால் அதை சொல்லாமல், பொய் சொல்லி ஏன் திருமணத்தை நிறுத்தணும், இதனால் எங்களுக்கு நிச்சயதார்த்தம் செலவு 13 லட்சம் ஆகியதாக பெண் வீட்டார் குற்றம் சாட்டினர். இதையடுத்து கிரண்குமார் மீது மணமகள் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
பெண் வீட்டார் கூறிய புகாரை அடுத்து, மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கிரண்குமாரை சிறையில் அடைத்தனர். விசாரணையில் தனக்கு விருப்பம் இல்லாமல் நடைபெறும் திருமணத்தை நிறுத்த தனக்கு எய்ட்ஸ் உள்ளதாக மணமகள் குடும்பத்தாரிடம் தெரிவித்தாக போலீசாரிடம் கிரண் குமார் தெரிவித்தார். அதன் பின்னர் நீதிமன்றம் சென்ற இந்த வழக்கில் கிரண்குமாருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த சம்பவத்தால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.