கடந்த திங்கள் கிழமை கடலூர் மாவட்ட காவல்துறை அதிகாரி விஜயக்குமாருக்கு 4-ம் வகுப்பு படிக்கும் தங்கள் குழந்தையை பள்ளிக்கு செல்லும் போது காரில் கடத்திவிட்டார்கள் என்ற தகவல் வந்துள்ளது. உடனே மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களை அலாட் செய்து கார் உள்ளிட்ட வாகனங்களை காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த திடீர் சோதனையால் ஒரே பரபரப்பாக இருந்தது.
இந்தநிலையில் சிதம்பரம் எஸ்பி கோயில் தெருவில் வசிக்கும் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் குழந்தையை சிதம்பரம் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அந்த குழந்தையை அழைத்து நைசாக பேசினார்கள்.
என் பெயர் ஹென்சிகா(9) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடலூர் புதுநகர் தனியார் பள்ளியில் 4-வது படிக்கிறேன். எங்க வீடு கடலூர் முதுநகரில் உள்ளது. எனது அப்பா அமானுல்லா என்றார். நான் காலையில் பள்ளிக்கு செல்லும் போது 4 பேர் என்னை காரில் கடத்தினார்கள். அப்போது நான் சத்தம் போட்டேன். கார் கதவுகள் சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் கேட்கவில்லை. பின்னர் அவர்கள் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே காரை நிறுத்தினார்கள். அதிலிருந்து தப்பித்து வந்துவிட்டேன் என்று கூறினார்.
குழந்தை கூறுவதில் சந்தேகம் ஏற்பட்ட காவல் துறையினர் உன்பாக்கெட்டில் என்ன இருக்கு என்று எடுக்க சொன்னபோது கடலூர்-சிதம்பரம் வந்த பேரூந்து பயணசீட்டு இருந்துள்ளது. இதுகுறித்து கேட்டபோது சிறிது தயங்கியவாறு பேசிய சிறுமி, அங்கிள் காலையில் செல்போனில் கேம் விளையாடியதற்காக ஸ்கூல் செல்லும்போது அப்பா திட்டினார். அதனால் எனக்கு ஆத்திரம் தாங்க முடியல பள்ளிக்கு ஆட்டோவில் சென்றுவிட்டேன். பள்ளிக்கு உள்ளே செல்லாமல் கடலூர் பேரூந்து நிலையத்திற்கு வந்து பேரூந்து மூலம் சிதம்பரம் மாமா வீட்டிற்கு வந்துவிட்டேன். ஆனால் மாமா கேக்கும் போது என்னை காரில் கடத்தியதாக பொய் சொன்னதால் என்னை காவல்நிலையத்தில் அழைத்து வந்துட்டாரு என அழுதுள்ளார்.
இதுமாதிரி வருவதற்கு எப்படி உனக்கு தோன்றியது என்று கேட்டதற்கு பள்ளிவிட்டு வந்தவுடன் அம்மா பொம்ம டீவி பார்க்க விடமாட்டாங்க. ஆனா அம்மா டீவியில சீரியல் பார்ப்பாங்க. அதனை நானும் பார்ப்பேன் அதில் ஒரு தொலைக்காட்சி சீரியலில் அம்மா திட்டியதற்காக அந்த பசங்க கோவித்துகொண்டு கிராமத்தில் உள்ள சொந்தக்காரங்க வீட்டுக்கு பஸ் ஏறி போவதை பார்த்தேன். அப்பா திட்டியவுடன் எனக்கு அது நினைவுக்கு வந்துச்சி. அதனால் தான் இப்படி வந்துவிட்டேன் என கண்ணீர் விட்டார்.
அதன் பிறகு தான் பரபரப்பாக காணப்பட்ட காவல்துறையினருக்கு பெருமூச்சே வந்தது. பெண்கள் தான் சீரியலில் முழ்கியுள்ளனர் என்று நினைத்தால், குழந்தைகளும் சீரியலில் வரும் கதாபாத்திரத்தை நினைவில் வைத்து கொண்டு இப்படியா செய்வது என பேசிக்கொண்டனர்.