விருதுநகர் தொகுதி எம்.பி.யும், நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சி கொறடாவுமான மாணிக்கம்தாகூர் சிவகாசியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்
“சிவகாசி– திருத்தங்கல் மேம்பாலம் அமைக்கின்ற பணி கடந்த 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருத்தங்கல் மேம்பாலத்தை வரவிடாமல் மாநில அமைச்சர் (கே.டி.ராஜேந்திரபாலாஜி) தடுக்கிறாரா? தடுத்தால், அதை மிகப்பெரிய குற்றமாக சிவகாசி, திருத்தங்கல் மக்கள் கருதுகிறார்கள். அணை பாதுகாப்பு மசோதாவிற்கு காங்கிரஸ் ஆதரவளிக்காது. அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால், காவிரி மற்றும் முல்லைப்பெரியாறு பிரச்சனைகளால், தமிழகம் மிக அதிகமாக வஞ்சிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசு இப்படிப்பட்ட செயலை எடுக்கக்கூடாது. அதனை எதிர்த்து காங்கிரஸ் வாக்களிக்கும்.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்தம் சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் மிகப்பெரிய மொழியாக்க வேண்டும் என்பதுதான். தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் அழிப்பதற்கான முயற்சியிலே அவர்கள் ஈடுபடக்கூடாது. கட்டாய இந்தி திணிப்பையும், கட்டாய சமஸ்கிருத திணிப்பையும் தமிழக காங்கிரஸ் கமிட்டி எதிர்க்கிறது. நிர்மலா சீத்தாராமன் போன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ். கைப்பாவையாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் இந்திக்காரர்களின் கையில் சிக்கிக்கொண்டு, பதவிக்காக இப்படி பேசுகிறார்கள். இந்தப் புதிய கல்விக்கொள்கை என்பது டிராஃப்ட் வடிவிலே இருப்பது, மிகப்பெரிய அளவிலே ஆர்.எஸ்.எஸ்.ஸுடைய கல்விக்கொள்கையைத் திணிப்பதற்கான திட்டமாக இருக்கிறது.
தமிழகம் நீட்டிலிருந்து விலக்களிப்படாது என்று தமிழிசை கூறுவது ஆணவத்தின் உச்சம். இதன் காரணமாக, தமிழிசை பா.ஜ.க.விற்கு குழிபறிப்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. மத்திய அரசு வார்த்தைஜாலத்தில் விளையாடுகிறதே ஒழிய, உண்மையாக திட்டத்திலே நிதிஒதுக்கீடு செய்து விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்பது வருத்ததிற்குரியது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோது பட்டாசுத்தொழில் இதுபோன்ற மிகப்பெரிய பாதிப்பை சந்தித்ததில்லை. இப்போது பட்டாசுத்தொழிலே உயிரோடு இருக்குமா என்ற நிலை உருவாகியுள்ளது. பட்டாசுத் தொழிலாளர்களுக்காக எங்களுடைய குரலைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.”என்றார்.