விருதுநகரில் மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ள நிலையில் அதற்கான விழா ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்களைச் சந்தித்தபோது கேள்விகளை எதிர்கொண்டார்.
வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே?
“மதக் கலவரங்களைத் தூண்டி விடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அதைத்தான் நாங்களும் கூறுகிறோம். மதக் கலவரங்களை தூண்டி விட்டது திமுக தலைவர் ஸ்டாலின். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல் பிரச்சனையை பெரிதாக்கி விட்டார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, தமிழ்நாட்டில் ஸ்டாலின், டெல்லியில் கெஜ்ரிவால் போன்றவர்கள் சமூக விரோத சக்திகளைத் தூண்டிவிட்டதனால் அப்பாவி இஸ்லாமியர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இரண்டு இனங்கள் மோதுவது போல் ஆகிவிட்டது. இதற்கெல்லாம் யார் காரணம்? ஓடிஓடி கையெழுத்து வாங்கினாரே ஸ்டாலின், வெறும் மத பிரச்சினைக்கு.. வேறு சமூகப்பிரச்சனைக்கு கையெழுத்து வாங்கினாரா?
இஸ்லாமிய மக்களின் மத்தியில் பயத்தை உண்டுபண்ணும் பணியை ஸ்டாலின் செய்துள்ளார். அதே பணியை இந்தியா முழுவதும் உள்ள சில தலைவர்கள் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் போன்ற அரபு நாடுகளுக்கு ஆதரவாக இப்படிச் செய்வதனால்தான், ஏதுமறியாத அப்பாவி இஸ்லாமியர்கள் போராட்டக் களத்தில் இறங்குகிறார்கள். அவர்களை வன்முறைக்கு இழுத்துச்செல்லும் பணியைத்தான் திமுகவை சார்ந்திருக்கும் கட்சிகளும் மதத்தை வைத்து அரசியல் செய்வதே, டெல்லி வன்முறைக்கு காரணம். இந்தக் கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என ரஜினிகாந்த் சொல்வது நியாயமான கருத்துதான். இது தவறிப் போகக்கூடாது. இஸ்லாமிய மக்களும் பாதுகாப்பாக வாழ வேண்டும்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தினால் இங்கிருக்கும் இஸ்லாமியருக்கு எந்த பாதிப்பும் இல்லை என எடப்பாடியார் தெளிவாகச் சொல்லிவிட்டார். அவ்வாறு பாதிக்கப்பட்டால் நானே பொறுப்பு என்றும் கூறிவிட்டார். சட்டசபையில் ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனக் கூறினார். அதற்கு முதலமைச்சர் இந்தச் சட்டத்தினால் யாராவது ஒருத்தர் பாதிக்கப்பட்டுள்ளரா? நீங்கள் கூறுங்கள் எனக் கூறினார். அதற்கு பதில் கூற முடியாமல் எழுந்து சென்றார் ஸ்டாலின். முதலமைச்சர் எடப்பாடி அவரின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் புறமுதுகிட்டு ஓடினார் ஸ்டாலின். பேச வேண்டிய இடத்தில் பேசாமல் வெளியே சென்று விட்டு வெளியே வந்து, பிரச்சினையை உருவாக்குகிறார். இந்த அரசியலை எடப்பாடியார் ஒரு காலமும் செய்யமாட்டார்.
நான் ஒரு விவசாயி எனக் கூறினார் எடப்பாடியார். அவர் விவசாயி என்று தானே கூற முடியும். பச்சைத் துண்டு போடுவதற்கு ஒரு யோக்கியதை வேண்டும் என்றார். உண்மைதானே! விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்ற பழமொழியே உள்ளது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சை. அந்த தஞ்சை மாவட்ட விவசாயிகளே முதலமைச்சருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு தந்தார்கள். இனிமேல் கபட நாடகம் போடக்கூடிய ஸ்டாலின் போன்றோரின் கருத்துக்கள் மக்களால் புறம் தள்ளப்படும். எளிமையாக உண்மையாக நடக்கக்கூடிய எடப்பாடியார் பின்னால் தான் இன்றைய தமிழகம் இருக்கிறது.
ரஜினிகாந்த் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் எனக் கூறினார். யார் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்? அதிமுக செய்யவில்லை. பிஜேபி செய்யவில்லை. எங்களோடு கூட்டணி வைக்கும் யாரும் செய்யவில்லை. இஸ்லாமியர்களும், இந்துக்களும், கிறிஸ்தவர்களும் அனைத்து மதத்தினரும் ஒன்றாகக் கரம் கோர்த்து நடக்க வேண்டும் என எண்ணுகிறோம். சண்டை இழுத்து விட்டது யார்? 1947-ல் கலவரத்தை தூண்டி விட்டது போல் கலவரத்தை தூண்ட நினைக்கிறார்கள். அந்தக் கட்சித் தலைவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டும். கலவரம் நடக்கும் வேளையில் எந்தத் தலைவர்களும் அங்கு இல்லை. தற்போது பிஜேபி அரசு தான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும்போது பிஜேபி இப்படி ஒரு தவறைச் செய்யுமா? தவறு செய்தது யார்? தூண்டுகோலாக இருந்தது யார்? பதில் கூறுங்கள்!”
பா.ஜ.க. எம்எல்ஏ தான் கோஷம் போட்டதாகக் கூறுகின்றனரே?
“கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். தமிழில் இப்படி ஒரு பழமொழியே உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை வரவேற்று இந்தியாவின் வல்லமையை எடுத்துக் கூறிக் கொண்டிருக்கிறார் மோடி. இந்த நேரத்தில் பா.ஜ.க.வினர் யாராவது கலவரத்தை இழுக்க காரணமாய் இருப்பார்களா? எதற்கெடுத்தாலும் சங்பரிவார் அமைப்புகள் தான் காரணமா? உண்மைத்தன்மையை அறிய வேண்டும். காரணம் அறிய வேண்டும். அவர்களைக் கைது செய்ய வேண்டும் இதுதான் எடப்பாடியார் கொள்கை. எங்கள் கொள்கை. அதைத்தான் ரஜினிகாந்த். கூறியிருக்கிறார்.”
அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்ததால் இந்தியப் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?
“எதிர்க்கட்சியினர் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் வந்தால் சந்தோஷப்படுவார்கள். பாகிஸ்தானில் 500 இந்துக்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதெல்லாம் இந்தியாவில் நடந்துள்ளதா? இவர்கள் கூறுவதெல்லாம் பொய். நமது நாட்டுக்கு உலகின் மிகப்பெரிய வல்லரசான சீன அதிபர் வந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மோடியைக் கட்டிப்பிடித்து பேசினார். அமெரிக்காவில் டிரம்புக்கு ஆதரவாக மோடி பிரச்சாரம் செய்தார். அப்பேர்ப்பட்ட ஒரு வலிமையான தலைவரை அவதூறாகப் பேசும் எதிர்க்கட்சியினரை மத்திய அரசு கண்டிக்காததுதான் ஜனநாயகம். கலவரத்தில் 27 பேர் மாண்டு போயினர்.
அப்போது காங்கிரஸ் கட்சி பேரணி நடத்துகிறார்கள். எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல் செய்கிறார்கள். எரிகிற வீட்டில் பிடுங்கியது எல்லாம் லாபம் என நினைக்கிறார்கள். இந்துக்கள் இறந்தாலென்ன? முஸ்லிம்கள் இறந்தாலென்ன? கிறிஸ்தவர்கள் இறந்தாலென்ன? அவர்களுக்கு தேவை ஒன்றுதான்! ஓட்டு.. ஓட்டு.. ஓட்டு.. ஓட்டு வங்கிதான் அவர்களுக்கு முக்கியம். அதே நிலைதான் ஸ்டாலினுக்கும் உள்ளது. இதுபோன்ற அரசியல்வாதிகளை நாட்டு மக்கள் புரிந்து கொண்டார்கள். இவர்களை வரப்போகின்ற தேர்தலில் அரசியல் அரங்கத்தில் இருந்து அகற்றுவார்கள்.”
ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடுவதற்கு அதிமுகவினருக்கு எந்த அருகதையும் இல்லையென்று ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?
“திமுக ஆட்சியின் கதை மறந்துவிட்டதா? எத்தனை கடைகளை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன? எத்தனை பெண்களை அடித்து தலை மயிரைப் பிடித்து இழுத்து துன்புறுத்துகிறார்கள்? பொள்ளாச்சி விவகாரத்தில் யார் குற்றம் செய்தார்களோ, அவர்களைக் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்து விட்டனர். எடப்பாடியார் நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். பெண்குழந்தைகள் தினமாகக் கொண்டாடும் தகுதி எங்களுக்கு மட்டும்தான் உள்ளது. பெண்களுடைய பாதுகாப்புக்காக காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எடப்பாடியார் தெளிவாக உண்மையாக உழைத்து கொண்டுள்ளார். குற்றவாளிகள் எல்லாம் வேறு மாநிலத்துக்கு சென்று விட்டனர்.
ஸ்டாலின் பதவிக்கு வரவேண்டும் என வெறி பிடித்துப் போய் உள்ளார் திருக்குவளையில் இருந்து கருணாநிதி வரும்போது எவ்வளவு சொத்து கொண்டுவந்தார்? நீதிமன்றத்தை அண்ணா அறிவாலயத்தின் கிளைக் கழகமாக நினைத்துக்கொண்டு நீதிபதியை மிரட்டுகிறார்கள். திமுக வெட்கக்கேடான, கேவலமான நாறிப்போன அரசியலை செய்கிறது. இதுபோன்ற அரசியலை யாரும் செய்ய மாட்டார்கள். எடப்பாடியார் ஏதாவது ஒரு கருத்தை தவறாக கூறி இருக்கிறாரா? மாற்றுக் கட்சி தலைவர்களைப் பற்றியோ பொது மக்களைப் பற்றியோ கேவலமாகப் பேசியது உண்டா? ஆனால் ஸ்டாலினுக்கு இதே வேலையாகிவிட்டது
எங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும். திமுக ஆட்சி காலத்தில் மக்கள் அடைந்த இன்னல்களை மறக்கமாட்டார்கள். எம்ஜிஆர் ஆட்சி வந்ததற்குப் பிறகுதான் மக்கள் மூன்று வேளை உணவு உண்டார்கள். எடப்பாடியார் ஆட்சியில்தான் மக்கள் நல்ல உணவை உண்டு கொண்டிருக்கிறார்கள். இதை தடுக்கத்தான் மத அரசியலைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மதம் என்பது மிகப் பெரிய மிருகம். ஜாதி என்பது தீக்கு ஒப்பானது. மதம் என்பது பூகம்பத்திற்கு ஒப்பானது. மதத்தை வைத்து அரசியல் செய்யும் திமுகவை மக்கள் புரிந்து கொண்டார்கள். இஸ்லாமியர்களும் புரிந்துகொண்டார்கள். இவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்துவார்கள்.”
சத்துணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரைவார்த்து விட்டார்கள் என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு..?
“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. சத்தியமாகச் சொல்கிறேன். எடப்பாடியார் மனதறிந்து தவறு செய்யமாட்டார்.” என்று உணர்ச்சிவசப்பட்டார், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.