திருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதில், பல இடங்களில் தண்ணீர் தேங்கி ஆறுகள் போல காட்சியளித்தது. பாலக்கரை பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தின் கீழ்ப்பகுதியில் சுரங்கம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்திவந்த நிலையில், நேற்று பெய்த கனமழையால் அந்தச் சுரங்கப்பாதை முழுவதும் மழைநீரால் நிரம்பியது. இதனால், அப்பகுதியின் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
அருகிலிருந்த கடைகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள், சர்க்கரை மூட்டைகள், பருப்பு உள்ளிட்டவை நீரில் மூழ்கியது. எனவே, இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை சுரங்கப் பாதையில் அமைந்துள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலை நீடிக்காமல் அதனைச் சரி செய்ய வலியுறுத்தியும் மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப் புறப்பட்டனர்.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், 'நாங்கள் இல்லாமல் நீங்கள் மனு கொடுக்கச் செல்லக்கூடாது' என்று வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், 'உங்களுடைய கட்சியை முன்னேற்றுவதற்கு நீங்கள் வேலை பார்க்கிறீர்கள்' என்று பதிலுக்குக் கூறியுள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொண்டு இருதரப்பினரையும் பேசி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.