விருதுநகரைச் சேர்ந்த காளிமுத்து – ராஜம்மாள் தம்பதியருக்கு, தங்கப்பாண்டியன், கருப்பசாமி ஆகிய இரு மகன்கள். 17 வயது தங்கப்பாண்டியன் வேலைக்குப் போகிறான். 15 வயது கருப்பசாமி 10-ஆம் வகுப்பு படிக்கிறான். காளிமுத்துவுக்கு எப்போதும் ராஜம்மாள் மீது சந்தேகம்தான். அதனால், கடந்த 6 வருடங்களாகப் பிரிந்தே வாழ்ந்தனர். இந்நிலையில், ஒருவழியாக சமாதானம் ஆகி, கடந்த 20 நாட்களுக்கு முன்பாக ஒன்று சேர்ந்தனர். இருவரும் ஒரே தனியார் மில்லில் ஒன்றாக வேலை பார்த்தனர். ஆனாலும், சந்தேகப் பேய் காளிமுத்துவை விட்ட பாடில்லை. வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்த கசப்பான அனுபவமும், புதிதாக முளைத்த சந்தேகமும் அவனைத் தூங்கவிடாமல் செய்தன. தன்னருகில் தூங்கிக்கொண்டிருந்த ராஜம்மாளைப் பார்க்கப் பார்க்க சந்தேக நெருப்பு எரிமலையானது. தவறான நடத்தையால், தன்னைத் தூங்கவிடாமல் செய்துவிட்டு, ‘இவள் மட்டும் தூங்குகிறாளே?’ என்ற ஆத்திரம் தலைக்கேறியது.
உள்ளுக்குள் புழுங்கிப் புழுங்கி, ‘இவள் உயிரோடு இருக்கும்வரையிலும் என்னால் தூங்கவே முடியாது’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டான் காளிமுத்து. மனைவி ராஜம்மாளின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டான். அதுவும், பார்க்கவே தனக்குப் பிடிக்காத முகம் என்பதால், மனைவியின் முகம் சிதையும் அளவுக்கு கல்லைப் போட்டுள்ளான். தகவல் கிடைக்கப்பெற்ற மம்சாபுரம் காவல் நிலைய போலீசார், சடலத்தை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவியைக் கொலை செய்த காளிமுத்துவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"தவறான நடத்தையோ? வீண் சந்தேகமோ? எதுவாக இருந்தாலும், உயிரைப் பறிப்பதா தீர்வு? மனைவியை வெறுத்து 6 வருடங்களாகப் பிரிந்திருந்த காளிமுத்து, கொலை செய்வதற்காகவா மீண்டும் சேர்ந்தான்? விபரம் தெரியும் வயதிலுள்ள மகன்களுக்காக காளிமுத்து சற்று யோசித்திருந்தால், இந்தக் கொலையே நடந்திருக்காதே!" என சொந்தபந்தங்கள் புலம்பி அழுகின்றன.