தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரின் காந்தி நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி முத்துமாரி பெரியசாமி நகரிலுள்ள கேஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர். முத்துமாரியோ ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர்களுக்கு வாணிஸ்ரீ (15), கலா ராணி (16) என்ற இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை முத்துமாரி புதிய பேருந்து நிலையம் அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது திடீரென்று ஆடுகள் கலைந்து ஒட, அதனைப் பிடிப்பதற்காக முத்துமாரி சென்றபோது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. படுகாயம் காரணமாக முத்துமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து சங்கரன்கோவில் எழில் நகரைச் சேர்ந்த சண்முகசாமி என்பவரிடம் சங்கரன்கோவில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே இறந்த முத்துமாரியின் மகள்களான வாணிஸ்ரீக்கும், கலாராணிக்கும் அன்றைய தினம் கணிதம் பொதுத்தேர்வு இருந்ததால் பெரியசாமி தன் மகன்களிடம், தாய், விபத்தில் இறந்ததைக் கூறினால் அவர்களின் மனம் பாதிக்குமே என்ற பதைபதைப்பில் அதனைக் கூறாமல் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியவர் அவர்களைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் வீட்டில் தங்க வைத்திருக்கிறார்.
பெற்ற தாய் இறந்தது தெரியாமலேயே மகள்கள் இருவரும் தேர்வு எழுதியிருக்கிறார்கள். இந்தச் சூழலில் பிரேதப் பரிசோதனை முடிந்த முத்துமாரியின் உடல் மதியம் ஒரு மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகே தேர்வு எழுதி முடித்து விட்டு வந்த மகள்களிடம் தாய் இறந்த தகவலை பெரியசாமி கூறியிருக்கிறார். கதறிய இரண்டு மகள்களும் மயானத்திற்குச் சென்று தாயின் உடலைப் பார்த்து கதறி அழுதிருக்கிறார்கள். பிள்ளைகள் அழுத சம்பவம் அங்கிருந்தவர்களின் மனதைப் பாரமாக்கியது.
மனைவி இறந்த நிலையில் மகள்களின் கல்விக்காக தந்தை செய்த அந்த சாமர்த்தியமான முடிவு, அந்தப் பகுதி மக்களை நெகிழ வைத்திருக்கிறது.