விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லைச் சேர்ந்த சங்கிலிராஜன், முன்னாள் தேமுதிக நகர துணைச்செயலாளர் ஆவார். நேற்றிரவு (05/09/2020), திருத்தங்கல்- அதிவீரன்பட்டி சாலையில் உள்ள ஒரு பாலத்தின் அருகே, உருண்டம்பாறை முட்புதரில், மர்ம நபர்கள் சிலர், இவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
சம்பவ இடத்தில் பிணமாகக் கிடந்த சங்கிலிராஜனின் உடலை மீட்ட திருத்தங்கல் காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இது அரசியல் சம்பந்தப்பட்ட கொலை அல்ல.. முழுமுழுக்க சொந்த விவகாரம் என்கிறார்கள், காவல்துறை வட்டாரத்தில்.
கொலைக்கான பின்னணி இதுதான்-
இறந்துபோன ஆசிரியை செல்லத்தாய் திருமணம் ஆகாதவர். இவர் பெயரில் ஏகப்பட்ட சொத்துகள் இருக்கின்றன. செல்லத்தாய்க்கு தங்கை வழி பேத்தி ராமதிலகம். வேறு சாதிக்காரரான சங்கிலிராஜன், ராமதிலகத்தோடு தொடர்பில் இருந்தார். அந்த நெருக்கத்தின் காரணமாக, செல்லத்தாயின் சொத்துகள் அனைத்தையும் ராமதிலகத்தின் பெயருக்கு மாற்றி பதிவு செய்ய தீவிரம் காட்டினார். இந்த நிலையில்தான், சங்கிலிராஜன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கள்ளத்தொடர்புகூட, சங்கிலிராஜன் விஷயத்தில் கண்டுகொள்ளப்படவில்லை. அரசியல் செல்வாக்கை முன்னிறுத்தி, தன்னோடு பழக்கத்தில் இருந்த ராமதிலகத்துக்காக சொத்துகளை அபகரிக்கும் முயற்சியில் இறங்கியதுதான், கொலை செய்யும் அளவுக்கு பெரிய விவகாரமாகி உள்ளது. செல்லத்தாயின் சொத்தில் தங்களுக்கும் உரிமை இருக்கிறது எனக் கருதிய பங்காளிகள் தூண்டுதலின் பேரிலேயே, சங்கிலிராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.
சங்கிலிராஜன் கொலை செய்யப்பட்ட காட்டுப்பகுதி, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வீட்டிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.