விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்- கான்சாபுரம் பஞ்சாயத்தில், துப்புரவுத் தொழிலாளியாக இருந்தபோது, எத்தனை ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியிருப்பார் சரஸ்வதி! எந்த உறுத்தலும் இல்லாமல், மூலைக்கு மூலை கொட்டிக்கிடக்கும் குப்பைகளை, செய்யும் தொழிலே தெய்வம் என்ற ஈடுபாட்டோடு, எத்தனை சிரத்தையாகச் செய்திருப்பார்!
‘ஊரையே சுத்தம் செய்தவராயிற்றே! ஊருக்கு நல்லதுதானே செய்வார்!’என்ற நம்பிக்கையோடு, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட சரஸ்வதியை, 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்து, பஞ்சாயத்து தலைவராக்கிவிட்டார்கள் கான்சாபுரம் வாக்காளர்கள்.
சரஸ்வதியும் கான்சாபுரம் பஞ்சாயத்து தலைவராகப் பொறுப்பேற்று, கம்பீரமாக தலைவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். எந்த கிராம ஊராட்சியில் துப்புரவுப் பணி செய்தாரோ, அதே கிராம ஊராட்சியின் தலைவர் ஆகிவிட்டார். மாலை, மரியாதையெல்லாம் கிடைத்திருக்கிறது.
துப்புரவுப் பணியாளரான சரஸ்வதியின் உன்னதமான சேவையை நன்குணர்ந்து, ஆதரவளித்து, பஞ்சாயத்து தலைவராக்கி அழகு பார்த்திருக்கும் கான்சாபுரம் வாக்காளர்களுக்கு ராயல் சல்யூட்!