அண்மைக் காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் இளைஞர்கள், மாணவர்கள் ஆயுதங்களுடன் நடந்து வருவது, தாக்குவது, வீலிங் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் திருச்சி காவேரி பாலத்தில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் வீடியோ காட்சி வெளியாகி வைரலான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி காவேரி பாலம், கல்லூரி சாலை, பைபாஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்று பைக் ஸ்டண்ட்டில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. சாலையில் செல்வோருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அந்த இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியதை தொடர்ந்து திருச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
குறிப்பாக புதிதாக திறக்கப்பட்ட காவிரி பாலத்தில் அந்த இளைஞர் செய்யும் வாகன ஸ்டண்ட் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.