கோவை சங்கனூர் கே.கே.புதூர் சிந்தாமணி நகர் 5வது வீதியைச் சேர்ந்தவர் நரேஷ் கார்த்திக். இவர் தனது 3 வயது மகளான வில்மா எந்த மதத்தையும், எந்த ஜாதி பிரிவையும் சாராதவர் என்ற சான்றிதழை வட்டாட்சியர் மூலம் பெற்றுள்ளார். இவரது இந்தச் செயல் பல தரப்பிலும் பாராட்டு பெற்றுவருகிறது.
இது குறித்து நரேஷ் கார்த்திக் கூறுகையில், “விண்ணப்பத்தில் சாதி, மதம் குறிப்பிடத் தேவையில்லை என்று தமிழக அரசு கடந்த 1973-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்து உள்ளது. ஆனாலும் பள்ளிகளில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகச் சாதி சான்றிதழ் கேட்கப்படுகிறது. சாதி, மதம் ஒழிந்தால் மட்டுமே மக்களிடம் ஏற்றத்தாழ்வு நீங்கும் என்பதைக் கருத்தில் கொண்டு எனது மகளுக்கு கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சாதி, மதம் சாராதவர் என்ற சான்றிதழ் பெற்றுள்ளேன்.
சாதி சான்றிதழ்களில் என்.சி. எனப்படும் நோ காஸ்ட் (சாதி சாராதவர்) என்ற பிரிவைச் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். அப்போது தான் சாதி, மதம் சாராதவர் விண்ணப்பிக்க எளிதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.