Skip to main content

திமுக பிரமுகரே எம்.எல்.ஏ.வை ஒருமையில் பேசும் வைரல் வீடியோ! 

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

Viral video of DMK   MLA

 

திமுக எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட கவுன்சிலரை சகட்டு மேனிக்கு ஒருமையில் பேசும் திமுக பெண் பிரமுகரின் வீடியோ காட்சிகள் வெளியாகி அறிவாலயத்தை அதிரவைத்துள்ளது.

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது நரியாம்பட்டு ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி பனந்தோப்பு. கடந்தவாரம் பெய்த மழையில், இந்தப் பகுதியில் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. இதனால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.

 

ஆம்பூர் கிழக்கு ஒன்றியத்தின் செயலாளராக இருப்பவர் எம்.எல்.ஏ வில்வநாதன். அவரது ஒன்றியத்தின் கீழ் இந்தக் கிராமம் வருவதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், குறைகள் கேட்கவும் நவம்பர் 20ஆம் தேதி சென்றிருந்தார். 

 

அவருடன் அந்தப் பகுதியின் மாவட்டக் கவுன்சிலர் சரிதாவின் கணவர் முத்துக்குமரன், மாதனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தீபாவின் கணவர் பொன்ராஜன்பாபு ஆகியோர் சென்றிருந்தனர். 

 

பெண்கள் கவுன்சிலராக இருந்தாலும் ஆக்டிங் கவுன்சிலராக அவர்களது கணவர்களே உள்ளனர். அதனாலயே பாதிக்கப்பட்ட மக்களைக் காண அவர்கள் சென்றனர். அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இளைஞர்கள், எம்.எல்.ஏ.விடம் காரசாரமாக விவாதம் செய்தனர். "நீங்க எதுக்கு வர்றீங்க. எங்க குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ வை வரச்சொல்லுங்க. அவுங்க வராம, நீங்க ஏன் வர்றிங்க. அவுங்களுக்குத்தானே நாங்க ஓட்டுப்போட்டோம், அவுங்கக்கிட்ட நாங்க கேட்டுக்கிறோம், நீங்க கிளம்புங்க” என்றனர். 

 

அண்ணனைத்தான் குடியாத்தம் தொகுதிக்கும் பொறுப்பாளரா முதலமைச்சர் நியமித்துள்ளார் என்றார் அருகில் இருந்த கட்சிப் பிரமுகர் ஒருவர். 

 

அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் எம்.எல்.ஏவிடம் பல கேள்விகளை எழுப்பினர். இதனால் எம்.எல்.ஏ, மாவட்ட கவுன்சிலரின் கணவர் ஆகியோர் திரும்பிச் சென்றனர். இதன்பின் அந்த மக்களிடம் பேசிய, நரியம்பட்டு ஊராட்சி பிரசிடென்ட் பாரதி, நம்ம பசங்க எம்.எல்.ஏக்கிட்ட ஆவேசப்பட்டது நல்லதுதான். ஒரு மாவட்ட கவுன்சிலர் சரியான பதில் சொல்லவில்லை என தொடர்ந்து ஒருமையில் பேசினார். 

 

இது அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி, இப்போது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரியம்பட்டு பிரசிடென்ட் ஆக இருக்கும் பாரதி, திமுகவில் மாவட்ட மகளிரணி நிர்வாகியாக இருந்தவர். இவர்மீது குற்றவழக்குகள் பதிவானதால், சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டவர். ஆனாலும் கட்சியில் நீடித்துவருகிறார். இந்நிலையில்தான் பாரதியின் இந்தப் பேச்சு, சர்ச்சையாகியுள்ளது.

 

அதேபோல், குடியாத்தம் தொகுதிக்குள் ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வில்வநாதன் செல்லும்போது, குடியாத்தம் எம்.எல்.ஏவை ஏன் அழைத்துச் செல்லாமல் சென்றார் எனும் கேள்வி திமுகவினராலேயே எழுப்பப்படுகிறது. இப்போது இந்த விவகாரம் அறிவாலயத்துக்குப் பறந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்