Skip to main content

சேலம் கஞ்சமலையில் ஏறிய டாக்டர் மர்ம மரணம்! அழுகிய நிலையில் சடலம் கண்டெடுப்பு!

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

சேலம் அருகே, கஞ்சமலை உச்சிக்கு ஏறிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மருத்துவர், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.

 

 salem kanjamalai incident - doctor missing case -police investigation

 



மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் கவுரவ் பெகரா (33). எம்பிபிஎஸ் முடித்த அவர் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் மருத்துவப் பட்டமேற்படிப்பு படிப்பதற்காக, அவர் சேலத்தை அடுத்த அரியானூரில் உள்ள வினாயகா மிஷன் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் எம்எஸ் (ஆர்த்தோ) பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த அவர், வார விடுமுறை நாள்களில் உடன் படித்து வரும் நண்பர்களுடன் சேர்ந்து, சேலத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களுக்குச் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) அவர், தன்னுடன் படித்து வரும் நாகேஷ், சைதன்யா, அவினாஷ், அக்ஷய் ஆகியோருடன் சேலம் அருகே உள்ள கஞ்சமலையில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்றார். கோயில் வழிபாடு முடிந்து நண்பர்கள் அனைவரும் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். பாதி வழியில் வந்தபோது, தனக்கு 'தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கிறது. நாக்கு வறண்டு விட்டது. தண்ணீர் குடிக்காமல் என்னால் இனி ஒரு அடி தூரம் கூட நடக்க முடியாது' என்று சொல்லி இருக்கிறார், கவுரவ் பெகரா. தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி சொல்லிவிட்டு அவர் மலையின் நடுப்பகுதியிலேயே தரையில் அமர்ந்து விட்டார்.

 



உடன் சென்ற நண்பர்கள் மலையடிவாரத்திற்கு வந்து பல மணி நேரம் ஆன பிறகும் கவுரவ் பெகரா கீழே வந்து சேரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உள்ளூர் மக்களுடன் மீண்டும் மலைப்பகுதிக்குச் சென்று தேடிப்பார்த்தனர். அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. செல்போனும் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றதால் தொடர்பு கொள்ள இயலாமல் தடுமாறினார். இதுகுறித்து நண்பர்கள் மறுநாள் (மார்ச் 16) இரும்பாலை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல் ஆய்வாளர் தனசேகரன் தலைமையில் காவலர்கள், உள்ளூர் மக்கள் வனக்காவலர்கள் ஆகியோர் கஞ்சமலை பகுதியில் ஜல்லடை போட்டு தேடினர். செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) மாலையில், பெருமாள் வட்டம், சந்தனக்காடு என்ற அடர்ந்த மலைப்பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக வனக்காவலர் பெருமாள் என்பவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அங்கே சென்று பார்த்தபோது, கவுரவ் பெகரா சடலமாகக் கிடந்தார். சடலம் உப்பிய நிலையில், நிறம் மாறி, அழுகிக் கிடந்தது. அவர் இறந்து 50 மணி நேரத்திற்கும் மேல் ஆகியிருக்கலாம் எனத் தெரிகிறது.

இதையடுத்து, வனக்காவலர்கள், உள்ளூர் மக்கள் உதவியுடன் சடலத்தை மூங்கிலில் பாடை போல் கட்டி, தூளியில் தூக்கி வந்தனர். சடலம், சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், இறந்துபோன கவுரவ் பெகரா, ஏற்கனவே மூன்று முறை கஞ்சமலைக்குச் சென்று வந்துள்ளார். நான்காவது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். அவருக்கு ஆஸ்துமா பாதிப்பு இருந்து வந்துள்ளது. கோடைக்காலம் என்பதால் மலை உச்சியில் இருந்து நடந்து வரும்போது அவருக்கு நாவறட்சி ஏற்பட்டு, கடுமையாக தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. தண்ணீர் குடிக்காததால் சோர்ந்து போய் பாதியிலே அமர்ந்து விட்ட அவர், செல்லும் வழி தெரியாததால் பாதை கால்நடைகள் செல்லும் குறுகலான பாதையில் இறங்கியுள்ளார். 

இடதுபுறம் செல்வதற்கு பதிலாக வலதுபுற பாதையில் சென்றதால் மேற்கொண்டு செல்ல வழி தெரியாமல் சிக்கிக் கொண்டார். நாவறட்சி ஏற்பட்டதாலும் அந்த இடத்திலேயே மயங்கி வி-ழுந்து இறந்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. எனினும், இறப்புக்கான சரியான காரணம் தெரியவில்லை என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் தெரிய வரும் என்கிறார்கள் காவல்துறையினர். கவுரவ் பெகராவின் பெற்றோருக்கும் முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்ததால், அவர்களும் சேலம் வந்திருந்தனர். சொந்த ஊரில் அடக்கம் செய்வதாகக் கூறியதால், அவர்களிடம் உடலை காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

 

 



போலீசாருக்கும் தாகம்!:

கவுரவ் பெகராவைத் தேடி கஞ்சமலைக்கு ஏறிய காவல்துறையினரும் குடிப்பதற்கு போதிய தண்ணீரின்றி கடும் நாவறட்சியில் சிக்கித்தவித்தனர். மலைப்பகுதியின் ஓரிடத்தில் சிறு குட்டை போன்ற பகுதியில் தண்ணீர் கிடைத்துள்ளது. அதில் கைக்குட்டையைத் முக்கி எடுத்து, அந்தத் தண்ணீரைக் குடித்து தாகம் தணித்துள்ளனர். மலையை விட்டு கீழே இறங்கினால் மறுநாள் மீண்டும் ஏறி வருவதில் உள்ள சிரமத்தை உணர்ந்த காவல்துறையினர் திங்கள்கிழமை இரவு முழுவதும் மலைப்பகுதியிலேயே வெட்டவெளியில் தங்கி விட்டனர். உள்ளூரைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் மக்கள் காவல்துறையினருக்குத் தேவையான உணவுகளை வழங்கி உபசரித்துள்ளனர். சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட காவல்துறை, வனக்காவலர்களுக்கும் இந்த சம்பவம் கிட்டத்தட்ட 'அட்வென்சர்' போலவே அமைந்துவிட்டதாக கூறுகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்