அதிமுக ஒன்றிணையாமல் வெற்றி சாத்தியமில்லை என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில், 'விக்கிரவாண்டி தொகுதியில் இரண்டு இலைகளுடன் கூடிய மாங்கனி இருக்கிறது என வலியுறுத்திச் சொல்லி இருக்கிறேன். அதுதான் விக்கிரவாண்டியில் வெற்றி பெறப் போகிறது. அதிமுக என்பது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதாவும் தொண்டர்களை வைத்து இதை மாபெரும் இயக்கமாக உருவாக்கினார்கள். உறுதியாக ஒரு தொண்டன் அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சரி செய்யாவிட்டால் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஓபிஎஸ் ஒருபோதும் அதிமுகவிற்கு உண்மையாக இருந்தது கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, ''நேற்று இதுகுறித்து நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறேன். இதற்கு மேல் விளக்கம் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. ஏனென்றால் கட்சியின் நலன் கருதிப் பேசாமல் இருக்கிறேன். அவரைப்போல நான் தெனாவெட்டாகவோ, சர்வாதிகாரமாகவோ பேச மாட்டேன் என்பது நாட்டு மக்களுக்கும், கட்சித் தோழர்களுக்கும் தெரியும். இந்தச் சூழ்நிலையில் கட்சி இணைப்பதுதான் ஒரே வழி. நடைபெற இருக்கின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்குப் பின்னர் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் கட்சி இணையாமல் சாத்தியமில்லை'' என்றார்.