தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 17 ஆம் தேதி காலை சென்னை அருகே கரையை கடந்தது. அதற்கு முந்தைய நாளான 16 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக பல இடங்களில் கனமழை பொழிந்தது.
இன்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று (17/10/2024) அதிகாலை கரையைக் கடந்ததைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. இந்தநிலையில் வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் 22ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாகவும், இது வலுவடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகரக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழக நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.