மகாபாரத போரின்போது திருமணமாகாத அழகான ஆண்மகனை நரபலி கொடுத்தால் போரில் வெற்றி பெறலாம் என்று சாஸ்திரம் அறிந்த சகாதேவன் சொல்ல அதன்படி அர்ச்சுனனுக்கும் நாக கன்னிக்கும் பிறந்த அறவானை பலி கொடுக்க முடிவு செய்தனர். அரவானும் இதற்கு ஒப்புக் கொண்டு ஒரு கண்டிஷன் போட்டான் அரவான். நான் திருமணம் செய்து கொள்ளாமலேயே பலியாக போகிறேன் எனக்கு ஒரு பெண்ணை மணமுடித்து கொடுங்கள். அவளோடு ஒரு இரவை இன்பமாக கழித்த பிறகு என்னை பலியிடுங்கள் என்று சொல்ல அவனது ஆசை நியாயமானது என்று எல்லோரும் ஒப்புக் கொண்டனர். ஆனால் பலியாக போகும் அரவானை மணக்க எந்த பெண்ணும் முன்வரவில்லை. யோசித்த பகவான் கண்ணன், தானே ஒரு மோகினி பெண்ணாக மாறி அரவானை திருமணம் செய்து ஒரு இரவை அரவானோடு கழித்தார். பிறகு மறுநாள் போர்க் களத்தில் அரவான்பலி கொடுக்கப்பட்டு போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர்.
பாண்டவர் தூதன் கண்ணன் ஆணாக இருந்து பெண்ணாக மாறியதால்தான் மனித பிறவியில் ஆண் பெண் கலவையாக பிறப்பவர்களை திருநங்கைகள்என அழைக்கப் படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் நாங்கள் பகவானின் மறுஅம்சம். எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கூவாகத்தில் நடைபெறும் அரவான்களை பலி திருவிழாவின்போது ஒன்று கூடி முதல்நாள் தாலி கட்டி கொண்டு இரவு முழுவதும் ஆடல் பாடல் கும்மி என்று சந்தோஷமாக இருந்து விட்டு மறுநாள் அரவான் பலி கொடுக்கப்பட்டதும் அவருக்காக கட்டிய தாலி அறுத்து விட்டு வெள்ளை புடவை உடுத்தி ஒப்பாரி வைத்து அரவானை நினைத்து அழுது முடித்த பிறகு எங்கள் சொந்த ஊர்களுக்கு புற்பட்டு செல்கிறோம். இதற்க்காக தமிழகம் மட்டுமல்ல. மும்பை, டெல்லி, பெங்களுர் என இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து இங்கு வருகிறார்கள்' இந்த விழாவின் மூலம் திருநங்கைகளை ஆண்டுக்கு ஒரு முறைசந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அது சந்தோஷமாக உள்ளது. மேலும் எங்களுக்காக பல தொண்டு நிறுவனங்கள் விழுப்புரத்தில் அழகிப் போட்டி, மிஸ்குவாகம், ஆடல் பாடல், பேச்சு போட்டி என நடத்தி எங்களுக்குள் உள்ள திறமைகளை வெளிப்படுத்த உதவுகிறது. இதனால் எங்களின் ஒற்றுமையும் பலப்படுகிறது சந்தோஷத்தையும் தருகிறது என்கிறார்கள் திருநங்கைகள். இவர்களை காண வாலிபர்கள் கூட்டம் குவாகத்தில் அலைமோதுகிறது.