பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்து கிராம மக்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த தர்மராஜா, திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அந்தக் கோயிலுக்குள் அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளனர். அப்போது அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் இடைநிலை சாதியினர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பட்டியலின அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பொன்முடி உறுதி தந்தார்.
இதனை அறிந்த இடைநிலை சாதியைச் சேர்ந்த மக்கள் கோயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அங்கு சென்றனர். அப்போது அவர்கள், தங்களின் சாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அரசு அடையாள அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நடந்துகொண்டு இருக்கும்போதே பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி அதில் இருந்த சிலர் தங்கள் கையிலிருந்த மண்ணெண்ணெய்யை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த அந்த மண்ணெண்ணெய் பாட்டில்களை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை காப்பாற்றினர். தொடர்ந்து அங்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.