Skip to main content

கோயில் வளாகத்தில் குடிகார ஆசாமிகள்... தட்டிக்கேட்ட பெண் வீட்டில் வெடிகுண்டு வீச்சு!

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

villupuram

 

விழுப்புரம் அருகே கோயில் வளாகத்தில் மது குடித்தவர்களைத் தட்டிக்கேட்ட பெண் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள முட்ராம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த அருணகிரி, அங்குள்ள மாரியம்மன் கோயிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார்.

 

சம்பவத்தன்று இக்கோயில் வளாகத்தில் அதே ஊரைச் சேர்ந்த அஜித் குமார் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த கோயில் பூசாரி அருணகிரி, கோயில் வளாகத்தில் இப்படிக் குடிக்கலாமா கோயிலில் சாமியை வழிபட பலர் வருவார்கள், அப்படிப்பட்ட இடத்தில் இப்படிப்பட்ட செயல் செய்வது சரியா? என்று கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த அஜித் குமார் மற்றும் அவரது நண்பர்கள் போதை ஏறிய மயக்கத்தில் அருணகிரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட அருணகிரியின் அண்ணன் ஆனந்தகுமார், அவரது மனைவி அன்பரசி ஆகியோர் அருணகிரிக்கு ஆதரவாக அஜித் குமார் மற்றும் அவரது நண்பர்களிடம் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் மேலும் கோபமடைந்த அஜித்குமார் அன்பரசியின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.

 

இதையடுத்து அன்பரசி கண்டமங்கலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அஜித்குமாரை ஃசெல்போனில் தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இந்தத் தகவலை அஜித் குமார் தனது நண்பர்கள் இளஞ்செழியன், முரளி ஆகியோரிடம் கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அன்பரசி தங்களைக் காவலர்களிடம் மாட்டி விட்டுள்ளார் என்று அன்பரசி மீது மேலும் ஆத்திரம் அடைந்து, அன்பரசியின் வீட்டுக்கு அருகில் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். அந்தக் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. பின்னர் அவரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

அன்பரசி இது குறித்து கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் அஜித்குமார் அவரது நண்பர்கள் இளஞ்செழியன் முரளி ஆகிய மூவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

 

கோயில் வளாகத்தில் மது குடிப்பதற்காக நாட்டு வெடிகுண்டு வீசும் அளவிற்கு இளைஞர்கள் சென்றுள்ளது அக்கிராம மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்