Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; தகராறு செய்த ரவுடிக்கு நேர்ந்த சோகம்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

villupuram pidagam nathamedu former panchayat president lakshmanan incident 
லட்சுமணன்

 

விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது பிடாகம் நத்தமேடு என்ற கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 38). இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 20 வழக்குகள் ஏற்கனவே அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இதனால் இவர் காவல் துறையின் ரவுடி லிஸ்டில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் லட்சுமணன் திடீரென்று கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து லட்சுமணன் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 

அப்போது அதே பகுதியை சேர்ந்த சரவணன், ஐயப்பன், சக்திவேல் மற்றும் இளையராஜா ஆகிய நால்வரும் லட்சுமணன் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. இவர்களில் சரவணன், சக்திவேல், ஐயப்பன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், "நாங்கள் எங்கள் நண்பர்களுடன் ஜானகிபுரம் பகுதியில் அமர்ந்து அடிக்கடி மது அருந்துவோம். அப்போது எங்களிடம் லட்சுமணன் பணம் கேட்டு மிரட்டுவார். அவர் அவ்வப்போது வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்று மீண்டும் வெளியே வரும்போது குடிப்பதற்கு எங்களிடம் பணம் கேட்டு அடித்து மிரட்டுவார். இதனால் நாங்கள் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்தோம்.

 

இந்த நிலையில் எங்கள் நண்பன் சரவணன் அரியலூர் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு  வைத்திருந்தார். அதை கைவிடுமாறு லட்சுமணன் சரவணனை மிரட்டினார். மேலும் சரவணன் உடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணின் கணவருடன் சேர்ந்து கொண்டு சரவணனுக்கு எதிராக லட்சுமணன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இப்படி எங்கள் சொந்த பிரச்சனையில் தலையிடுவது, எங்களை அடித்து மிரட்டுவது, பணம் கேட்டு தகராறு செய்வது என லட்சுமணன் எங்களுக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வந்தார்.

 

இவரது தொல்லை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இனிமேல் லட்சுமணனை விட்டு வைக்கக் கூடாது. அவரை கொலை செய்வது என திட்டமிட்டோம். அதன்படி சம்பவத்தன்று காலை லட்சுமணனுக்கு போன் செய்து இனிமேல் நமக்குள் பிரச்சனை எல்லாம் இருக்கக் கூடாது. நாம் அனைவரும் சமாதானமாக போவோம். நடந்த சம்பவங்களை மறந்து விடுவோம். இனிமேல் ஒற்றுமையாக இருப்போம். அதை நாம் மது விருந்து வைத்து கொண்டாட வேண்டும் என்று கூறி லட்சுமணனை ஜானகிபுரம் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தோம்.

 

villupuram pidagam nathamedu former panchayat president lakshmanan incident 
சரவணன் - ஐயப்பன் - சக்திவேல்

 

பகையை மறந்து எங்களுடன் லட்சுமணன் வந்தார். அப்போது நாங்கள் தயாராக வைத்திருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் தூவினோம். இதில் நிலைதடுமாறி லட்சுமணன் கீழே விழுந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உருட்டுக் கட்டையால் அவரை அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தோம். மேலும் அவர் இறந்ததை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றோம்" என மூவரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். விழுப்புரம் பகுதியில் ரவுடிகள் மோதலில் நடந்துள்ள இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்