விழுப்புரம் பாண்டி சாலையில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் மேலாளராக வேலை செய்து வந்தார் சீனிவாசன். கடந்த 4ஆம் தேதி காலை 11.30 மணி வாக்கில் கார் மற்றும் பைக்கில் வந்த ஒரு கும்பல் சீனிவாசன் இருந்த அறைக்கு சென்று அவர் மீது வெடிகுண்டு வீசி அவரை நிலை குலையசெய்து அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி விட்டனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். சம்பவம் நடந்த உடனே மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார். இதற்காக 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி போலீசார் கூறும்போது, "பெட்ரோல் பங்க் உரிமையாளர் பிரகாஷிடம் பிரபல ரவுடி அசார் என்பவர் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அப்போது அவர் பணம் கொடுக்காமல ரவுடிகள் பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் அந்த ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அவர்கள் பிரகாஷை கொலை செய்ய வந்துவிட்டு ஆள் மாற்றி சீனிவாசனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்தனர்.
இதனிடையே கொலையாளிகள் கொலை செய்துவிட்டு தப்பி சென்ற கார், கொலைக்கு பயன்படுத்திய அறிவாள் ஆகியவற்றை பேரங்கியூர் பகுதியில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் மாவட்ட எஸ்பி ஜெயகுமார் கூறுகையில், "திமுக நகர செயலாளர் செல்வராஜ் கொலை வழக்கில் தொடர்பு உடைய முக்கிய குற்றவாளியான அசார் இக்கொலை சம்பவத்தினை நிகழ்த்தியிருக்கிறார் என தெரியவருகிறது. அசார் மீது 2 கொலை வழக்குகள் உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பணம் கேட்டு மிரட்டியத சம்பந்தமாக இக்கொலை நடந்திருக்கலாம் என்று கருத சந்தேகத்திற்கிடமாக உள்ளது காரணம்.
அந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதற்கு பழிவாங்க இவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. மேலும் அசார் கூட்டாளிகள் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரகாஷிடம் பத்தாயிரம் பணம் கேட்டு வாங்கிச் சென்றுள்ளனர். மேலும் கொலை நடந்தபோது சீனிவாசன் முன்பு இருந்த மேஜையில் 28 லட்சம் பணம் இருந்துள்ளது அதை கொலையாளிகள் எடுத்து செல்லவில்லை. அசார் முக்கிய குற்றவாளி அவருடன் இக்கொலையில் 7 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது.
மேலும் சிறையில் உள்ள ரவுடி இருசப்பன் அவரது உறவினர் ராஜா ஆகியோருக்கும் இக்கொலையில் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வருகிறது. புதுச்சேரியில் ரவுடிகள் தொழில் அதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் போன்ற கலாச்சாரத்தை விழுப்புரத்திலும் கொண்டுவர பார்க்கிறார்களா என்ற வகையில் விசாரணை செய்து வருகிறோம். பிரகாஷ் என நினைத்து சீனிவாசன் கொல்லப்பட்டாரா அல்லது பிரகாஷ் மிரட்டும் நோக்கத்தில் சீனிவாசனை கொன்றார்களா என்பது பற்றி குற்றவாளிகளை பிடித்தவுடன் அவர்களிடம் விசாரணை நடத்தினால் தெரியவரும்" என்றார்.
இந்நிலையில் இக்கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அசார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான முயற்சியில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை இறங்கியுள்ளது. அசார் விசாரணையின் முடிவில் தான் கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவரும் என்கிறது காவல்துறை.