விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரும் தர்மபுரி மாவட்டம் அம்பலபட்டியைச் சேர்ந்த மணிமேகலை என்பவரும் காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மணிமேகலை தமிழ்நாடு காவல்துறையில் போலீசாக பணி புரிந்து வருகிறார். தற்போது மணிமேகலை விழுப்புரம் அருகில் உள்ள பாணாம்பட்டு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அதில் வசித்து வருகின்றனர். நடராஜன் மணிமேகலை தம்பதிக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
மணிமேகலை ஏற்கனவே சென்னையில் உள்ள சில காவல் நிலையங்களில் பணியில் இருந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் மாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற்று வந்துள்ளார். தற்போது மணிமேகலை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்துள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. மணிமேகலை சென்னையில் பணியாற்றும் போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் சமாதானம் அடைந்து கடந்த மூன்று மாதமாக விழுப்புரத்தில் இருவரும் பிள்ளைகளுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.இருப்பினும் மீண்டும் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் சமையலறைக்கு சென்ற மணிமேகலை அங்கிருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் நடராஜன் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். தீக்காயம் அடைந்த மணிமேகலையை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மணிமேகலை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கு கணவன் மனைவிக்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் விழுப்புரத்தில் பெண் போலீஸ் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் போலீசார் மற்றும் பொது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.