பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் ஆர். என். ரவி நேற்று (16.07.2024) பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று (17.07.2024) ஆளுநர் ஆர். என். ரவி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஆளுநர் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ சந்திப்பை மேற்கொண்டேன். நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கொலை சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பலரும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளை எழுப்பி வரும் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியுள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.