விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட முட்டுக்காடு, சோமசமுத்திரம், வடகால், கோணை புதூர், ஜே ஜே நகர் ஆகிய மலையோர கிராமப் பகுதிகளில் கடந்த வாரம் கரடி நடமாட்டம் இருப்பதை விவசாயிகள் நேரில் பார்த்துள்ளனர். கடந்த சில நாட்களாக கோணை புதூர் பகுதியில் உலா வரும் கரடியானது மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, கன்றுக் குட்டி ஆகியவற்றைத் தாக்கி காயப்படுத்தி வந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தபோது கரடி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து வனச்சரகர் வெங்கடேசன் மேற்பார்வையில் கோணை புதூர் பகுதி மலையடிவாரத்தில் கரடியைp பிடிப்பதற்காக கூண்டு வைத்தனர். அந்தக் கூண்டில் வாழைப்பழம் வைக்கப்பட்டது. வாழைப்பழம் சாப்பிட வரும்போது கூண்டில் கரடி சிக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் கரடி கூண்டுக்குள் வருவதற்குள் அப்பகுதியில் சுற்றித் திரிந்த குரங்குகள் கரடிக்காக வைக்கப்பட்டிருந்த கூண்டிலிருந்த வாழைப்பழங்களை எடுத்துச் சென்றுவிட்டன. இதையடுத்து கூண்டுக்குள் பலாப்பழத்தை வைத்து கரடியைப் பிடிக்க முடிவு செய்துள்ளனர் வனத்துறையினர்.
இந்த நிலையில் நேற்று முழுவதும் அப்பகுதியில் கரடி நடமாட்டம் இல்லை என்றும் வேறு பகுதிக்கு உணவு தேடி கரடி சென்றிருக்கலாம் என்று எண்ணிய வனத்துறையினர். மலைப்பகுதியின் பல்வேறு இடங்களில் கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். கரடியைப் பிடிக்க கூண்டு வைத்து 4 நாட்கள் ஆகியும் அது பிடிபடாதது பொதுமக்கள் மத்தியில் மேலும் பயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக செஞ்சி மலைப் பகுதி கிராமங்களில் கரடி நடமாட்டம் இல்லை என்றும் திடீரென தற்போது கரடி அப்பகுதிக்கு எப்படி வந்தது என மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரடி பிடிபடாமல் இருப்பதால் வரும் நாட்களில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை மீண்டும் தாக்கினால் என்ன செய்வது என்ற பயத்திலும் உள்ளனர் அப்பகுதி மக்கள். கரடி கூண்டுக்குள் அகப்படவில்லை என்றால் வலை விரித்தாவது பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.